புராணங்கள் : ஒரு பார்வை

திரு மூலர், ஸ்ரீ அரவிந்தர், ஆனந்த குமாரசாமி, கார்ல் உங், ஜோசப் காம்பெல், கோசாம்பி, ஜெயமோகன் என புராணங்களின் அனைத்து பரிமாணங்களையும் பரிணாமத்தையும் கண்டு வியந்திட பகிர்ந்திட

Thursday, October 26, 2006

மரணத்தை சந்தித்தல்-2 ருரு-ப்ரமத்வரா (ப்ரியம்வதா) மகாபாரதம்-ஸ்ரீ அரவிந்தர்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

அடுத்ததாக நாம் காணப்போவது மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் காணப்படும் ஒரு தொன்மக்கதை.

பிருகு முனிவரின் வழி வந்த பிரமதி ஒரு அப்சர மங்கையை மணந்ததால் பிறந்தவன் ருரு. ஸ்தூலகேச மகரிஷியின் ஆசிரமத்தில் வளர்ந்த ப்ரமத்வரா எனும் பெண்ணுடன் சிறுவயது முதல் ருரு கொண்ட நட்பு வளரவளர காதலாகியது. ஆனால் ஒரு நாள் சர்ப்பம் தீண்டிட இறக்கிறாள் ப்ரமத்வரா. துயரால் துடிக்கும் ருரு அசரீரியால் வழிநடத்தப்பட்டு தன் ஆயுளில் பாதியை அளித்து ப்ரமத்வராவை அழைத்து வருகிறான் ருரு.

இத்தொன்ம கதை மகரிஷி ஸ்ரீ அரவிந்தரால் 'காதலும் மரணமும்' (Love and Death) மூலம் மீள்-சொல்லப்பட்டது. இதில் ஸ்ரீ அரவிந்தர் செய்த மாற்றங்கள் புராணவியல் பார்வையில் முக்கியமானவை. ஸ்ரீ அரவிந்தரே இது குறித்து கடிதமொன்றில் குறிப்பிடுகிறார்:

"ருரு ப்ரமத்வரா தொன்மத்தில் -பெயர் ப்ரியம்வதா என மாற்றப்பட்டுள்ளது- அவளுக்கு சர்ப்பத்தினால் ஏற்படும் மரணமும் பின்னர் அவள் கணவன் தன் ஆயுளில் பாதியை அளித்து அவள் உயிரை மீட்பதுவுமே மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இது சாவித்திரிக்கு இணைகாதை என்ற போதிலும் கவித்துவ எழிலுடன் விஸ்தீரிக்கப்படாதமையால் பொதுவாக கவனிக்கப்படாது விளங்கியது. இக்கவனிப்பின்மையிலிருந்து மீட்டெடுக்க நான் இக்கவிதையில் முயன்றுள்ளேன். அம்முயற்சி முழுமையான வெற்றியடைய இக்கவிதைக்கு மேலும் இந்துதன்மை சிறப்பாக அளிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இக்கவிதை பலவருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது (1899 இல்) பாரத சிந்தனை மற்றும் பாரம்பரியத்தின் இருதயத்தினுள் நான் நுழைந்திடாத கால கட்டத்தில். (இக்கவிதையில்) கிரேக்க தொன்மங்களின் பாதாள உலகம், (ஸீயஸின் தண்டனை குழியாகிய) டாட்டரஸ் மற்றும் வாழ்க்கை காதல் மரணம் ஆகியவை குறித்த உணர்ச்சிபூர்வத்தன்மைகள் போன்றவற்றின் நிழல் பாரத புராண பாதாள லோகங்களில் படிந்துள்ளது. இக்கவிதையின் மைய கதை மட்டுமே மகாபாரதத்தினுடையது . காமன் ருருவை சந்திப்பது மற்றும் பாதாள உலகிற்கு செல்வது போன்றவை மூல கதையின் கவித்துவ போக்கில் தேவையாக உருவானவை."


இனி ஸ்ரீ அரவிந்தரின் வரிகள் சிலவற்றை காண்போம். அடைப்புக்குள் இருப்பவை வரிகள் கதையோட்டத்தில் எங்கு வருகின்றன என்பதைக் காட்ட:


[ருரு-ப்ரியம்வதா காதல் இன்பம்]


...
அனைத்துமே ஆனந்தமாக தென்றலும்
வாசமும் நிறங்களும் மலர்களும் அவற்றுடன் ஊடாடும் ஒளிக்கற்றைகளும்
வாழ்தலின் ஆனந்தம்
உலகின் மீது
ஆனந்தத்தின் ஆசை[ப்ரியம்வதா மரணம்]

...
அவள் அவள் காதலின் அழகத்தனையுடன்
ஓர் கணம் நின்றாள்
பின் மரணத்தில் உதிர்ந்தாள்
...
ஒரு சோக கதறலுடன்
உடல் வெளிறிட
குரல் முனகிட
அவள் உடல் குவிந்து விழுந்தது.
...
அவள் மேல் சாய்ந்தான் ருரு
இறந்த அவள் உதடுகள் பேசிட
அப்பசும் வனத்திடை கிடந்தாள் ப்ரியம்வதா...[ருருவின் வேதனை]

...
புவியின் பிரகாசிக்கும் உதாசீனத்தை அவன் உணர்ந்தான்
அத்துடன் முழுமையாக உணர்ந்தான்
தனிமையின் வேதனையின் இயலாமையை
...
வனத்தினூடே ஓலமிட்டு மரக்கிளைகளூடே புலம்பியழுது
மகத்தான வேதனை விண்ணோக்கி எழுந்தது அவனுள்
துயரம் மகத்தாக அவனை துடிக்க துடிக்க சுட்டெரித்தது.[மன்மதன் வருகை]
...
அங்கு நின்றிருந்தான் ஒரு பொன்னிறச் சிறுவன்
அழகு சொட்ட சொட்ட தரித்த உடை பாதியுடல் மூட.
...
அவர்களிருவரும் நடந்தனர் அந்த மர்மமான நதியின் அருகில்
கரைகள் பார்வையிலிருந்து விலகிட
நோக்குமிடமெங்கும் நீரால் நிரம்பிட
வானும் நீரினுள் அமிழ்ந்து காணும் நதிக்கரையினில் நின்றனர்.


[பாதாள பயணம்]

...
ருரு ஓலமிட்டான்: ...கேட்பாய் இந்த காதலன் புலம்பலை ஓ சமுத்திரமே!
உன் முடிவிலி பரப்பினில் ரிதத்தின் இயக்கம் உண்டெனில்
இந்த பூவுடலுடன் உனக்குள் என்னை சென்றிட விடுவாய்.
...
ராட்சத அலையால் மேலுயர்ந்துயர்ந்து அவனை
வாரி உள்ளிளுத்திட்டது
சமுத்திரம்.[எமன் முன்னால்]

...
விசித்திர மேடையொன்றில் எழும்பிற்று அரியாசனம்
அங்கு அச்சமுறுத்தும் அழகு அலங்கரிக்க அமர்ந்திருந்தான் எமதர்மன்
ருரு அவனுக்கு வணக்கம் செலுத்தினான்.
...
அவன் கொடுக்கும் வாழ்க்கை காலத்தின் மேன்மையை
அவன் காணட்டும் என்றான் எமன்
கால காட்சிகள்
மேன்மை கோலங்கள்
பூரணமும் புகழும் அடைந்த வாழ்வின் உச்சம்
அவன் முன் விரிந்தது...
...
தன் வாழ்வின் பாதியை எடுத்தெறிந்தான் அவன்
அத்தருணமே இடியுண்டாற் போல் வீழ்ந்தான்உயிர் மீட்டல்

...
நடுக்கத்துடன் அவன் தன் காதலியின் அன்புப்பெயரை
கூறி அவளை நெருங்கித்தொட்டிட
அத்தருணத்தில் அவளைப் பிணித்திருந்த
பாதாளத்தின் மௌன முடிச்சுகள் அறுந்தன.
..
புலரும் வைகறை தருணந்தனிலே
புவியின் அக்குழந்தைகள் இன்மொழி
கானகக் குயிலின் இசையுடன் கலந்து
ஒலித்தது எங்கும்.
.வார்த்தைகளற்று மகிழ்ந்தது பூமி
இச்சித்திரங்கள் ப்ரீதி ஜோஷியின் உருவாக்கம். இவற்றினை ப்ளாஷ் சித்திரத்தொகுப்பாக ஸ்ரீ அரவிந்தரின் வரிகளுடன் காண இங்கு சொடுக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home