புராணங்கள் : ஒரு பார்வை

திரு மூலர், ஸ்ரீ அரவிந்தர், ஆனந்த குமாரசாமி, கார்ல் உங், ஜோசப் காம்பெல், கோசாம்பி, ஜெயமோகன் என புராணங்களின் அனைத்து பரிமாணங்களையும் பரிணாமத்தையும் கண்டு வியந்திட பகிர்ந்திட

Tuesday, October 24, 2006

ஆஸ்திரேலிய பூர்வீகக்குடிகளின் ஆன்மிகமும் புராணமும்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது






"ஆஸ்திரேலிய பழங்குடிகள் இருவித காலங்களின் இருப்பினை நம்புகின்றனர். இரு இணையாக ஓடும் இயக்கம். ஒன்று நீங்களும் நானும் பங்கு கொள்ளும் புறவய அறிதலுக்கு இணங்கும் ஒரு கால ஓட்டம். மற்றதோ கனவுக்காலம். முடிவற்ற ஆன்ம சுழற்சியான இக்காலம் நனவுலக காலத்தினைக் காட்டிலும் உண்மை செறிந்தது. இக்கனவுகாலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளே ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித குறியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கை நடைமுறை விதிகள் ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. அதீத ஆன்மிக ஆற்றல் வாய்ந்த பழங்குடி (பூசாரிகள்) இப்புனித கனவுக்காலத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்."



மேற்காணப்படும் மேற்கோள் இயற்பியலாளர் ப்ரெட் ஆலன் வூல்ப்பின் 'The Dreaming Universe' எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் ஆன்மிக வெளிப்பாடுகள் செழுமையும் ஆழமும் கொண்டதோர் ஆன்மிக மரபினைக் காட்டுகின்றன.

கனவுகாலம் என்பது கூட வெள்ளையரின் பதம் தானாம், வூல்ப் கூறுகிறார். ஆதிவாசிகளை பொறுத்தவரையில் கனவு என்பது நனவுலகுடன் இணைந்தியங்கும் ஒரு இருப்பு என்கிறார். (அருந்தா அல்லது அரண்தா எனும் ஆதிவாசி இனத்தாரின் 'அல்கெரிங்கா' எனும் பதத்தை ஸ்டானர் என்பவர் கனவுகாலம் என மொழிபெயர்த்தார்.)


ஆதிவாசிகளின் புராண நாயகர்கள் வீர புருஷர்கள் தம் சாகஸங்களை இந்த அல்கெரிங்காவிலேதான் செய்கின்றனர். ஆதிவாசி புராணங்களை ஆய்வு செய்த காரெட் பர்டெனின் வார்த்தைகளில் 'அனைத்து புராணங்களும் உண்மையானவை ஏனெனில் அவை புனிதமானவை'. ஆனால், வூல்ப் வினவுகிறார்,

"எந்த அளவுக்கு கனவுகாலம் என்பது போன்ற ஒரு புராண ரீதியிலான கற்பனை உண்மையாக இருக்க முடியும்? இது நுட்பமான விதத்தில் அணுகப்பட வேண்டிய பிரச்சனை. புராண சம்பவங்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ நாம் அணுகுகையில் அவைகளில் காணப்படும் காலமானது நாம் நேர்கோட்டில் அறியும் காலமல்ல. சூரியனை பூமி சுற்றிவருவதாலோ அல்லது பாரிஸில் ஒரு பரிசோதனை சாலையிலுள்ள ஒரு சீசியம் அணு ஒளிச்சிதைவடைவதையோ அடிப்படையாக கொண்டு நாம் அனுபவிக்கும் காலமல்ல புராணம் நிகழும் காலத்தின் இயற்கை"(பக் 149).

வரலாற்றின் கால ஓட்டத்தையும் புராணத்தின் கால ஓட்டத்தையும் (கனவுகாலம்) வூல்ப் இங்கு வேறுபடுத்துகிறார். ஆனால் நெடுநீள வரலாற்றுக் கால ஓட்டத்துடன் புராண கால ஓட்டமும் இணைந்து ஒருவித இழையோட்டமாக விளங்குவதே மானுட சமுதாயங்களின் வரலாற்றில் நாம் காண்பது. ஆதிவாசியை பொறுத்தவரையில் புராணங்கள் நிகழும் கனவுக்காலம் மீண்டும் மீண்டும் நிகழும் தன்மையுடன் என்றென்றும் புதிப்பிக்கப்பட்டவாறே உள்ளது.




புராணம் என்பது பாரத மரபின் பதம். அதிசயிக்கத்தக்க வகையில் இப்பதத்திற்கு கொடுக்கப்படும் வியாக்கியானம் மேற்கண்ட ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் ஆன்மிக தரிசனத்திற்கு இணைத்தன்மை கொண்டுள்ளது.

புராணம் = புராதனமானது கூடவே நவமானது எனும் பொருள் படும் பதச் சேர்க்கையே (புராண்+அபி+நவம்).

1 Comments:

Anonymous Anonymous said...

arumayilum arumai

2:49 PM  

Post a Comment

<< Home