புராணங்கள் : ஒரு பார்வை

திரு மூலர், ஸ்ரீ அரவிந்தர், ஆனந்த குமாரசாமி, கார்ல் உங், ஜோசப் காம்பெல், கோசாம்பி, ஜெயமோகன் என புராணங்களின் அனைத்து பரிமாணங்களையும் பரிணாமத்தையும் கண்டு வியந்திட பகிர்ந்திட

Thursday, November 02, 2006

உண்மை நிகழ்வா உலகப் பெரும் ஊழி?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

உலகத்தையே அழித்திட்ட வெள்ளப்பெரு ஊழி குறித்து பல சமுதாயங்களின் புராணங்கள் பேசுகின்றன. இவற்றுள் மிகப் பழமையானது கில்காமெஷ் தொன்மக்கதையே ஆகும்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒரு தொன்மவீரன் இந்த பெரு ஊழியிலிருந்து தப்பி பின் மீண்டெழுந்த மானுடத்தின் தந்தை என போற்றப்படுகிறான். இந்த ஊழி மற்றும் புனர் எழுச்சி
என்பதே ஒரு தொன்மப்படிமமாக இருக்கலாம். பல நாகரீகங்கள் இயற்கை சீற்றத்தினை இறைவனின்/கடவுளரின் தண்டனையாக கருதின. அழிக்கப்பட்ட சமுதாயங்கள் அவை செய்த
பாவத்தினால் அழிந்ததாகவும் கருதின. (இதில் பண்டைய தமிழரை ஒரு நல்ல விதிவிலக்கென கூறலாம். பின்னாளில் போலி-வரலாற்று பேர்வழிகளால் கண்டமாக்கப்பட்டு அறிவியல் மதிப்பிழந்து நிற்கும் குமரி நிலநீட்சி கடல் நீர்மட்ட உயர்வால் அழிந்த தொல்-வரலாற்று குடியிருப்புகளைக் குறித்த நினைவாக இருக்கலாம். ஆனால் கற்பனையில் தேர்ந்தவர்களும் ஆன்மச்செழுமையில் எவருக்கும் குறையாதவர்களுமான தமிழர் எந்த தெய்வ தண்டனையாகவும் இந்த அழிவு நினைவுகளின் தொன்ம உருவாக்கத்தில் குறிப்பிட்டிடவில்லை.) ஆனால் இந்த தொன்மப் படிமம் விவிலியத்தில் நுழைந்த பின்னர் வரலாற்று உண்மை எனும் அந்தஸ்தை பெற்றது. பல நாடுகளின் வரலாற்றினை எழுதிய கிறிஸ்தவ மத துறவிகள் அந்நாடுகள் எங்ஙனம் நோவாவின் (விவிலிய ஊழி நாயகன்) சந்ததிகளால் அந்தந்த பிரதேசங்கள் குடியேற்றம் அடைந்தன என்பதனை விவரிக்கலானார்கள். இசுலாமிய மீள்-வாதத்திலும் நோவாவின்
வெள்ள ஊழி உலகளாவிய சரித்திர நிகழ்ச்சியாக இடம்பிடிக்க ஆரம்பிக்கலாயிற்று. அண்மைக்காலங்களில் இந்த நோவாவின் ஊழிக்கான நிலவியல் ஆதாரங்கள், நோவாவின் பேழை (ark) துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் கதை (உதாரணமாக காண்க: நோவா பிரளயத்தை சரித்திர உண்மை நிகழ்வு என வாதிடும் ஒரு அடிப்படைவாத வலைப்பதிவு இங்கு.

இத்தகைய போக்குகள் - தொன்மங்களை நேரடியாக பொருள் கொள்ளுதல் அனைத்து சமயங்களிலும் உண்டு. பவளப்பாறை அமைப்புகளை இராமன் கட்டிய பாலத்துக்கு
ஆதாரமாக கூறும் போக்கு போன்றது இது. ஆனால் ஆபிரகாமிய நெறிகளில் -குறிப்பாக எவாஞ்சலிக்கல் மற்றும் வகாபிய போக்குகளில்- இந்த போக்கு பிரச்சார வேகத்துடன்
எழுந்து தன்னை சரித்திர உண்மையாக பிரகடனம் செய்து வருகிறது. "முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்; முப்புரமாவது மும்மல காரியம்" என்பார் திருமூலர். தொன்மத்தை
அகத்துவ பயணத்தின் குறியீட்டு கதையாடலாக மாற்றுவது எந்த அளவு ஆரோக்கியமானதோ அந்த அளவு ஆரோக்கியமற்ற அறிவியல் விரோத போக்கு நேரடி பொருள் கொண்டு
போலி வரலாறு திரிக்கும் அடிப்படைவாத போக்கு. தொன்மங்களின் ஆதார ஆற்றலையே அழிக்கும் குறுகலான பார்வை இது. மேலே சுட்டிய அடிப்படைவாத பார்வை எவ்வாறு
புராணங்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எனவே அவற்றிலுள்ள தவறுகளை இங்கு காணலாம்.


'முஹம்மதே! இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை.
எனவே பொறுமையைக் கடைபிடிப்பீராக! நம்மை அஞ்சுவோருக்கே நல்ல முடிவு உண்டு.' 11 : 49 - குர்ஆன்.
இது போன்ற செய்திகள் அன்றைய அரபு மக்கள் அறிந்திருக்கவில்லை. இத்தனை காலமாகியும் இவை எல்லாம் நமக்கு புதிய செய்திகளாகவே தெரிகிறது. மக்கா,மதீனா, சிரியா,எமன் போன்ற நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்த முகமது நபி துருக்கி நாட்டில் உள்ள ஜூதி மலையில் நோவாவின் கப்பல் இன்றும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை எப்படி அறிந்திருக்க முடியும்? என்ற கேள்வி வருகிறதல்லவா?


மெசபடோமியா பிரதேசத்துடன் அன்றைய அராபிய பிரதேசத்திற்கு நல்ல தொடர்பிருந்தது, வியாபார தொடர்பும் இருந்தது. இந்த ஊழிக்கதை அராபியருக்கு தெரிந்திருக்கவே
செய்தது. மேலும் தமது புனித வரலாற்றில் இத்தொன்மத்தை இணைத்துக்கொண்ட யூத மக்களும் அங்கு வாழ்ந்தனர். எனவே "இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை." என குரான் கூறியிருப்பது வெள்ள ஊழிக்காதையாக இருக்கும் பட்சத்தில் குரானில் தகவல் பிழை உள்ளதென்றே கருதவேண்டும். துருக்கியில் உள்ள மலையில் நோவாவின் பேழை ஒதுங்கியது என்பதும் ஆதாரமற்றதாகும். இது குறித்து பல பதிவுகள் பல மோசடிகள் வெளியாகியுள்ளன. ஊழி என்பதே சுமேரிய பிரதேசத்தில் நிகழ்ந்த வட்டார நிகழ்வாக இருக்கலாம். இதுவே பின்னாளில் தொன்மமாக உரு பெற்றிருக்கலாம் எனக் கருதுகிறார் ஐசாக் அஸிமாவ்.

சுமேரிய தொன்மங்களுக்கும் விவிலிய பிரளய விவரணத்துக்கும் இருக்கும் இணைத்தன்மைகளை சுட்டிக்காட்டுகிறார் அஸிமாவ். பொதுவாக இந்த சுமேரிய பிரளயம் ஏற்பட்டதாக கருதப்படும் காலமான கிறிஸ்து சகாப்தத்திற்கு முந்தைய மூவாயிரத்தை (கிமு 3000-2700) ஒட்டிய எகிப்திய பதிவுகள் எதுவுமே இந்த பிரளயத்தைக் குறித்து கூறாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.


அண்மையில் சர்ச்சையை கிளப்பியுள்ள மற்றொரு ஆராய்ச்சி வால்டர் பிட்மன் மற்றும் பில் ரையன் என்போரது. துருக்கியின் போஸ்போரஸ் (Bosphorous) நீர்வாயில் ஏற்பட்ட பெரு
வெள்ள அழிவுக்கு பின்னர் மெசபடோ மியா ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு நகர்ந்த மக்கள் இன குழுக்களே இந்த பெரு ஊழிக்கதையை கொண்டு சென்றிருக்கலாம் என அவர்கள்
ஊகிக்கின்றனர். 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திட்ட ஊழிப் பேரழிவு இது என அவர்கள் கணிக்கின்றனர். சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த ஆராய்ச்சிகள் மீண்டும் பெரூஊழி
தொன்மம் தொல்-நினைவில் வாழும் ஒரு வட்டாரம் சார்ந்த நிகழ்வே அன்றி பிற்கால இறைநூல்களில் விவரிக்கப்படும் இறை விருப்பு-வெறுப்பு சார்ந்த வரலாற்று நிகழ்வல்ல என்பதனைக் கூறிடும். (குரானில் கூறப்பட்டுள்ளதே நோவாவின் சமுதாயத்தை மட்டும் அழித்த பிரளயம்தான் என்று வாதிடலாம். ஆனால் இங்கு அடிப்படையே இந்த நோவா தொன்மமே வரலாறு அடிப்படையில்லாதது. ஊழி ஒரு வட்டார நிகழ்வின் தொல் பதிவு. அதன் வரலாற்றுக் கணக்கு விவிலிய/குரானிய காலகணக்கிற்கு ஒத்துவராத ஒன்று.)


இந்திய வேத இலக்கியங்களில் உலகழிக்கும் பெரு ஊழி குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. வேதத்தில் இல்லாததால் பொய் என்று சொல்ல வரவில்லை. மாறாக உலகளாவிய
அழிவென்றால் அது வேதத்திலும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அவை குறித்த குறிப்பெதுவும் இல்லை என்பது உலகளாவிய ஊழி என்பது தொன்ம பெரிதுபடுத்தலே ஆகும்.
பிற்கால புராணங்களிலேயே உள்ளது. இதிகாசங்களில் துவாரகை அழிவு குறித்து குறிப்பு வருகிறது. அதுவும் கடல்கோள் என்பதாக இருக்கிறது. அதுவும் முழு உலகு சார்ந்த அழிவு
இல்லை. ஆக, நோவா, யுத்னபிஷ்டிம், மனு போன்ற கதாபாத்திரங்கள் தொடர்புடைய பெருஊழி என்பது தொன்ம உருவாக்கம் மற்றும் அதன் விரிவடைதலே ஆகும்.


'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞசிக் கொள். வானமே நீ நிறுத்து!' என்று கூறினோம். தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலையின் மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமானோர் எனவும் கூறப்பட்டது. குரான் 11 : 44

மேற்கூறிய அடிப்படைவாத பதிவில் ஜுதி மலை துருக்கியில் உள்ள மலைத்தொடராக கூறப்பட்டுள்ளது. ஆனால் விக்கிபீடியா பதிவு முக்கிய விஷயங்களைக் கோடிட்டு காட்டுகிறது:
"ஜூதி மலைக்கு துருக்கியில் குடி-தாக்(Cudi-Dagh) என பெயர். இதற்கு துருக்கியில் 'மிக உயர்ந்த' அல்லது 'உயரங்கள்' என அராபியில் பொருள். கிழக்கு துருக்கியில் பல மக்களும் சில இஸ்லாமிய அறிஞர்களும் இதுவே அராரத் என கருதுகின்றனர். ஆனால் குடி-தாக் வான் ஏரிக்கு தெற்கே அமைந்துள்ளது. அதன் உயரம் 7700 அடி ஆகும். உள்ளூர் வாசிகள் இம்மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்துக்கு நோவாவின் பேழை மிதந்து சென்றது என கருதுகின்றனர். ...ஜுதி என்றும் ஒரு மலை உள்ளது. அராரத் என்றும் ஒரு மலை உள்ளது. இரண்டுமே விவிலிய விவரணத்தில் வரும் அராரத் (உரர்து) பகுதியில் அமைந்துள்ளன. பைபிளும் குரானும் ஒரே குரலில் பேழை வந்தமர்ந்த இடத்தைக் குறித்து பேசுவது சாத்தியமே. அராரத் மலையும் ஜுதி மலையும் ஒரே மலைதானா? சிலர் இவ்விரு பெயர்களையும் ஒன்று போல மாற்றி மாற்றி பயன்படுத்துவதை காணலாம்."
முகமதுவின் காலத்திற்கு முன்னரே அராரத் மலைத்தொடரும் நோவாவின் பேழையும் இணைத்து பேசப்பட்டுவிட்டன. சிரியா ஈராக் ஈரான் ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் உள்ள ஜுதி மலைத்தொடர் அராபியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்க வழியில்லை. அத்துடன் ஏற்கனவே யூதேய-கிறிஸ்தவ வழக்காடல்களில் அராரட் மலையில் நோவாவின் பேழை குறித்து அறிந்தவராகவே முகமதுவும் இருந்திருப்பார்.



மேலே கூறிய அடிப்படைவாத வலைப்பதிவு பின்வருமாறு வியப்படைகிறது.
மக்கா,மதீனா, சிரியா,எமன் போன்ற நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்த முகமது நபி துருக்கி நாட்டில் உள்ள ஜூதி மலையில் நோவாவின் கப்பல் இன்றும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை எப்படி அறிந்திருக்க முடியும்?
என வியப்படைகிறது. ஆனால் மேலே உள்ள வரைப்படத்தை பார்த்தால் இந்த வியப்பு அவசியமற்றதென்று புரியும். இன்றைய துருக்கியின் சிரியா ஈராக் அருகேயுள்ள பகுதியில் மெசபடோ மிய நாகரிகத்தொட்டில் பிரதேசத்தின் அருகிலேயே இந்த பெரு வெள்ள ஊழி தொன்மத்தொடர்பான நில அமைப்புகள் அமைந்திருக்கின்றன என்பதனைக் காணலாம். இதில் விசேஷ இறைசெய்தி இறக்கம் எதுவும் தேவையில்லை. வட்டார கதைகளின் பரவுதலே போதுமானது. வானவர் கபிரியேல் தேவையில்லை சாதாரண மானுடத்தின் கதைசொல்லும் திறனே போதுமானது.இன்னமும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த ஜூதி என்கிற பெயரில் தெற்கரேபியாவில் ஒரு மலை இருப்பதுதான். துருக்கியில் இருக்கும் ஜூதி மலைக்கு 200 ஆண்டுகளாகவே அந்த பெயர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இஸ்லாமியர் வருவதற்கு முன்னரே கிறிஸ்தவ மடாலயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது (பார்க்க: http://www.islamonline.net/english/Science/2002/10/article07.shtml)

இம்மலைத்தொடரில் அவ்வப்போது ஏதாவது ஒரு சிகரத்தில் நோவாவின் பேழை அகப்பட்டதாக புரளி கிளம்புவதும் பின்னர் அது தவறு என நிரூபிக்கப்படுவதும் ஏறத்தாழ வழக்கமான நிகழ்வாயிற்று. இதற்கு உடனடியாக சில கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் ஆதரவு/எதிர்ப்பு தெரிவிப்பதுவும் அவ்வாறே.
உதாரணமாக கூறவேண்டுமானால் இம்மலைத்தொடரில் ஈரான்-துருக்கி எல்லைக்கு வடக்கே இருமைல் கல்கள் தொலைவில் இருக்கும் துருப்பினார் (துருக்கி விமானப்படை கேப்டன் இல்ஹான் துருப்பினார் பெயரில்) அமைப்பு. படகு போல இருக்கும் இந்த அமைப்பு ரோன்வாய்ட் என்பவரால் நோவாவின் பேழையாக பிரபலப்படுத்தப்பட்டது (அன்னார் ஸியோன் மலை சவூதி அரேபியாவில் உள்ள ஜெபெல் அல் லாவ்ஸ் எனக் கூறியவர்) பின்னர் துருக்கியின் நிலவியல் அறிவியலாளர் முரத் அவ்ஸி தெள்ளத்தெளிவாக இது இயற்கையின் உருவாக்கமே அல்லாது பேழையல்ல என நிரூபித்தார். அதன் பின்னர் சிறிது நின்றிருந்த இந்த பேழை திருவிளையாடல் மீண்டும் தொடங்கியுள்ளது.
(முழு கட்டுரையையும் இந்த உரலில் காண்க: http://noahsarksearch.com/AvciMurat/TelcekerEarthFlow.pdf)

முதலில் குறிப்பிட்ட அடிப்படைவாத வலைப்பதிவு குறிப்பிடும் மலை சிகரம் குறித்து (17,000 அடி ஏறத்தாழ 5,200 மீட்டர்கள்) நேஷனல் ஜியாகிராபிக் அண்மையில் சில தகவல்களை வெளிக்கொணர்ந்தது. அச்சிகரத்தில் பேழை இருப்பதாக 1989 இல் தன்னந்தனியாக இச்சிகரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்ட அகமது அலி அர்ஸ்லான் பேழைக்கு 200 அடி தூரத்தில் தான் சென்றதாகவும் அதனை புகைப்படம் எடுத்ததாகவும் கூறுகிறார். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதன் உண்மையை சந்தேகிக்கின்றனர். ஒரு பேழை குறித்து ஆராய்ச்சி செய்பவர் கூறுகிறார்: 'அகமது பெரிய வாய் சவடால் காரர் ஒரு சமயம் தன்னிடம் நோவாவின் பேழையின் 3000 புகைப்படங்கள் இருப்பதாகவும் திடீரென 5000 புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறுவார்' இந்த தேடலை இயக்குகிற மெக்கிவன் 2003 இல் ஏற்பட்ட வெப்பமேற்றத்தினால் பனி உருகியதால் கிடைத்த சில செயற்கைகோள் புகைப்படங்களை இதற்கு ஆதாரமாக கூறுகிறார். ஆனால் இந்த படங்களின் அடிப்படையில் தேடுவது அத்தனை புத்திசாலித்தனமானது அல்ல என்றே தோன்றுகிறது. "இதெல்லாம் வெறும் நம்பிக்கை அவ்வளவுதான்" என்கிறார் லாரன்ஸ் காலின்ஸ். கலிபோர்னிய பல்கலைக்கழக ஓய்வுபெற்ற நிலவியல் பேராசிரியரும் நிலவியல் புகைப்பட ஆராய்ச்சியாளருமான இவர் இவ்வாறு மனிதரால் உருவாக்கப்பட்டதாக தோன்றுகிற ரீதியில் புகைப்படம் எடுக்கப்பட்டவை அருகில் சென்று பார்க்கையில் அவ்வாறில்லதாதாகிவிடும் என சுட்டிக்காட்டுகிறார்.பொதுவாக நிலவியலாளர்கள்15000 அடி உயரத்தில் கப்பல் நிற்பதெல்லாம் இயலாத காரியம் என்றே கருதுகின்றனர். (நேஷனல் ஜியாகிராபிக் செய்தி செப்டம்பர், 2004)

இதற்கிடையே 2005 இல் காஸ்மோபோஸிக் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த அறிவியலாளர்கள் இந்த 'நோவா பேழை'யும் இயற்கை உருவாக்கமே என்பதனை அறிவித்துள்ளனர். http://news.nationalgeographic.com/news/2004/09/0920_040920_noahs_ark.html

Labels: ,

4 Comments:

Blogger ரவி said...

அய்யா உம்மிடம் பட்டையை கிளப்பும் பகுத்தறிவு உள்ளது...

சுகவனப்பிரியன் பதிவை கிழித்து கூறுபோட்ட போதே தெரிகிறது..

ஆனால் நீர் கடவுளை நம்புபவரா ? ஏன் சுயம் சேவகன் என்று எழுதுகிறீர் ?

2:01 AM  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஏனெனில் நான் ஒரு ஸ்வயம் சேவகன்.
இறை அனுபவத்தேடல் நம் மானுட இனத்தின் உயிரியல் கூறில் ஒன்றாக அமைந்துள்ளது. மாணிக்கவாசகருக்கு அது 'விரிபொருள் முழுதாய் விரிந்தோன்' என்றும் 'அணுத்தருந் தன்மையில் ஐயோன்' என்றும் விரியும் சுயமாக வெளிப்படுகிறது. ஐன்ஸ்டைனை ஒரு cosmic religious experience ஐ கணிதச்சமன்பாடுகளில் தேட செய்கிறது. வோர்ட்ஸ் வோர்த்தை 'wisdom and spirit of the universe' (Prelude) என பாட வைக்கிறது. மானுடத்தின் மகத்தான சாதனைகள் வாழும் நனவுலக யதார்த்தத்திற்கு அப்பாலாக சுயத்தினை விரித்திட அது எடுத்துக்கொண்ட முயற்சிகள்தாம். எனவே இறை அனுபவம் மற்றும் இறை அனுபவத் தேடல் ஆகியவற்றினை (குங்குமம் பூசப்பட்ட வழியோர மரமாகட்டும், மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமாகட்டும்) நான் மதிக்கிறேன். ஆனால் இறைவனை புறவய அதி ஆளுமையாக கற்பனை செய்து அதன் மூலம் இறையியலையும் அதிகார அமைப்பையும் உருவாக்கும் போக்குகளையும், இன்று பெட்ரோ-டாலர்கள் வழியாக அதனை பாரதத்தின் குரல்வளையை நெறித்திடும் கருத்தியலாக வார்த்தைகள் மூலமாகவும் ஆயுதங்கள் மூலமாகவும் நடத்தி வரும் போக்கினை எதிர்க்கிறேன்.
நன்றி ரவி.

3:29 AM  
Blogger R.DEVARAJAN said...

மந்வந்தரங்களின் முடிவிலேற்படும் ‘அவாந்தர ப்ரளயங்கள்’ பற்றிய விபரங்கள் பல புராணங்களில் உள்ளனவே ?
அத்தகைய ஒரு ப்ரளயத்திலிருந்து மலயத்வஜ பாண்டியனைக் காக்க ஏற்பட்டது தானே ‘மத்ஸ்ய அவதாரம்’ ?
தேவ்

11:53 AM  
Blogger R.DEVARAJAN said...

மந்வந்தரங்களின் முடிவிலேற்படும் ‘அவாந்தர ப்ரளயங்கள்’ பற்றிய விபரங்கள் பல புராணங்களில் உள்ளனவே ?
அத்தகைய ஒரு ப்ரளயத்திலிருந்து மலயத்வஜ பாண்டியனைக் காக்க ஏற்பட்டது தானே ‘மத்ஸ்ய அவதாரம்’ ?
தேவ்

11:53 AM  

Post a Comment

<< Home