அமெரிக்க விண்வெளி நிறுவனம் கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம்.
அல்லது ஒரு தொன்மம் எப்படி அறியப்பட கூடாது?
2002 அக்டோபரில் 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ' பத்திரிகையில் நாஸாவின் செயற்கை கோள் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்களில் இலங்கைக்கும் பாரதத்திற்கும் இடையில் ஒரு 'பாலம் ' இருப்பதை கண்டு பிடித்துள்ளதாகவும் அது 1,750,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் இது இராமாயணத்தின் திரேதா யுக காலத்துடன் ஒத்து போவதாகவும் கூறியது. பொதுவாக இவ்வாறு நம் நம்பிக்கைகளுக்கு வலுவூட்டும் அறிவியல் 'கண்டுபிடிப்புகள் ' உடனடியாக காட்டுத்தீ போல பரவி விடுகின்றன. இன்று இத்தகைய காட்டூத்தீ பரவலுக்கு மூல காரணமாகவும் பரவும் ஊடகமாகவும் இணையம் இருந்து வருகிறது.
'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸின் ' செய்தி எங்கிருந்து பெறப்பட்டதென்பதை மிக சரியாக கூறமுடியாவிட்டாலும் நுறெ¢றுக்கு தொண்ணுெறு சதவிகிதம் இணையத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதே தன்மையுள்ள ஒரு செய்தி விவாதத்திற்காக http://www.indolink.com/Religion/r091702ெ130924.php என்னும் இந்திய தர்மங்களுக்கான இணைய தள விவாத களத்தில் கிடைக்கிறது. இச்செய்தியின் தன்மை பெரும்பாலும் அறைகுறையாக இந்திய கலாச்சார அறிவு கொண்ட ஏதோ மேற்கத்திய மூளையின் விளைவே என எண்ண வைக்கிறது.உதாரணமாக, 'இப்பாலத்தின் வளைவும் காலமும் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை காட்டுகிறது ' என்கிறது இச்செய்தி. எப்போதிலிருந்து ஒரு புகைப்படத் தோற்றத்திலிருந்து ஒரு நிலத்தின் மேல் பகுதியின் காலத்தை நிர்ணயம் செய்யும் தொழில் நுட்பத்தை நாசா உருவாக்கியது ? பின்னர் 'பாலத்தின் ' காலத்தை 1.750,000 ஆண்டுகள் எனக் கூறும் இச்செய்தி, இக்காலம் குறித்த 'தகவல் ' இந்த இடத்தில் நிலவி வரும் 'மர்மமான புராணக் கதையான இராமாயணம் ' ( 'mysterious legend ') நிகழ்ந்த காலகட்டமான திரேதாயுக காலத்திற்கு ஒத்திருப்பதாக கூறுகிறது. என்றிலிருந்து இராமாயணம் 'மர்மமான புராணக் கதை 'யாயிற்று ? தெளிவாகவே இது ஒரு நிலை பிறழ்ந்த மூளையில் உதித்த மோசடி வேலை.
உதாரணமாக எங்கள் ஊரில் 'தாடகை மலை' என ஒரு மலை உள்ளது. ஒரு பெண்ணின் வடிவம் கொண்ட மலை. இராமன் அம்பு எய்து கொன்ற தாடகை மலையாகி வீழ்ந்தாள் என பாட்டி சொல்லி கேட்டதுண்டு. ஒரு தொன்மம் நிலப்பரப்பின் இயற்கை அமைப்புகளுடன் எவ்விதத்தில் பொது பிரக்ஞையில் இயைகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. இராமாயணம் எந்த அளவு நம்மில் இரண்டற கலந்துள்ளது என்பதற்கான சான்றும் கூட. ஆனால் இங்கு நடத்தப்பட்ட நிலவியல் பரிசோதனைகளில் நிலத்து உயிர்ம சத்து (organic carbon content) சிறிது வேறுபடுகிறது என வைத்துக்கொள்வோம் அதைவைத்து இது தாடகையின் உடல் எனக் கூறினால் அது எந்த அளவு நம்மை நாமே அவமானப்படுத்தும் செயல் என நினைத்துப்பாருங்கள். அதே நேரத்தில் தொன்மம் பாரதமெங்கும் இத்தகைய புனித நிலப்பரப்புகளை (sacred landscapes என்போமா) உருவாக்கியுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆடம்ஸ் பிரிட்ஜ் என காலனியாளர்களாலும், 'இராமனின் பாலம் ' என நம் நாட்டவராலும் கூறப்படும் பவள படிம தீவுக் கூட்டங்களின் அழகிய புகைப்படங்கள் உள்ளன.
மேலே நீங்கள் பார்த்தது நாசா செயற்கை கோள் புகைப்படம காட்டும் அதே நிலப்பரப்பினை அதனைவிட தெளிவாக பாரத செயற்கை கோளான ரிசோர்ஸ்ஸாட் படமெடுத்துள்ளது. பால அமைப்பு பவளப்பாறைத் தொகுப்பேயன்றி அது மானுட உருவாக்கம் அல்ல என்பதனை இப்புகைப்படம் நிரூபிக்கிறது. (http://www.isro.org/pressrelease/ph2.jpg)
திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்களை காணலாம். இவை எல்லாமே எவ்வளவு அழகாக ஒரு காவியம் நம் தேசத்தின் மக்களின் உணர்வுகளோடும் நம் தேச மண்ணிலும் இரண்டற கலந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. ஆனால் நாசா புகைப்படத்தை '1,750,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலத்திற்கான ஆதாரமாக காணுவது ' அப்புகைப்படத்தின் அழகையும் இராம காதை நம்முள் இரண்டற கலந்தியங்கும் தளத்தையும் கொச்சைபடுத்துவதாகும்.
துரதிஷ்ட வசமாக இச் 'செய்தி 'யை இந்திய ஊடகங்கள் கேள்வியேதுமின்றி ஏற்றதும் மற்றும் சில மின் அஞ்சல் விவாத மற்றும் உரையாடல் குழுக்களில் இராமயணமே நாசாவால் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது போன்ற கருத்துகள் பரவியதும் நாம் எந்த அளவு தாழ்வு மனப்பான்மையில் மூழ்கியிருக்கிறோம் என்பதனை காட்டுகிறது. இராம காதையின் உள்ளார்ந்த நிகழ்வுகளின் வரலாற்றடிப்படை குறித்து பொதுவாக உண்மையாகவே இருக்க முடியும் என்பதே பல வரலாற்றறிஞர்களின் முடிவு. வேத காலத்திற்கு சற்று பின்னே இராமயணம் இயற்றப் பட்டிருக்க வேண்டும். வேத தொகுப்பிற்கு சற்று (சில நூற்றாண்டுகள்) பின்னாக இராமகாதை இயற்றலுக்கு சற்று முன்னதாக இராம காதையின் உள்ளார்ந்த நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டும்.
இயற்கை உருவாக்கமான பாலத்தன்மை கொண்ட பவளத்தீவுதொடர்களை 'பாலமா 'க்கி நாஸா மூலம் இராமாயணத்திற்கு அறிவியல் சான்றிதழ் வாங்க முற்படுவது மிகத் தவறானது. இத்தகைய தன்மைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். தொடக்க காலம் முதலே புராணங்களை நேரடி உண்மையென நம்பும் போக்கை நம் ஆன்மீக அருளாளர்கள் கண்டித்து வந்துள்ளனர். இராம காதை இதிகாசமெனினும் அதன் புராண ,கவித்துவ மற்றும் அகவய கூறுகளை வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்தறிவது அவசியம். இம்முறையில் 'சீதாயாம் சரிதம் மகத் ' என வால்மீகி மகரிஷியால் அழைக்கப்பட்ட காவியமான இராமாயாணம் நம் ஆன்மீக மற்றும் சமுதாய உயர்வுக்கான பொக்கிஷமாகக்கூடும். மாறாக 1,750,000 வருடங்களுக்கு முன் வெறும் கற்கால கருவிகளை பயன்படுத்திய நம் குரங்கு-மானுடவின தொல் மூதாதைகளை இராமராக மாற்றும் வக்கிரம் தேவையற்றது.
'முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்'
எனும் திருமந்திர வாசகத்தின் அறிவியல் பார்வை இவ்விஷயங்களில் சறுக்கி விழாமல் நம்மை வழிநடத்தட்டும். தொன்மங்கள் அக நிகழ்வுகளை விளக்கிடும் ஒரு மொழி அம்மொழி இம்மண்ணில் செம்மை அடைந்தது மட்டுமன்றி அதனை மேலும் மேலும் மெருகடைய செய்து அதனை ஒரு அறிவியல் துறையாகவே மாற்றியுள்ளது நம் மரபு. துரதிர்ஷ்டவசமாக பகுத்தறிவு என்னும் பெயரில் இந்த புராணமரபு உதாசீனப்படுத்தப்பட்டது மட்டுமின்றி அதனை மரபு நீக்கம் செய்யவும் அது உண்மையான மரபல்ல எனக் கூறவும் காலனிய ஆதிக்க தாக்கம் பெற்ற 'பகுத்தறிவுவாதிகள்' முயன்றனர். இதே மனத்தாக்கத்தின் மற்றொரு விளைவே புராண மரபுகளுக்கு சரித்திர ஆதாரத்தினை தேடும் போக்கு. எனில் புராண நிகழ்வுகளுக்கு சரித்திர மையக்கரு இருந்திருப்பதே இயலாத ஒன்றா? நிச்சயமாக இல்லை. வரலாற்று மையமும் புராணத்துவ தன்மைகளுமாக இணைந்து பரிணமிக்கும் ஒரு ஜீவ இயக்கமாகவே புராணம் காணப்பட வேண்டும். ஒரு புராணத்தின் வரலாற்று கரு அறிவியலின் உரைகல்லில் தேய்த்துப்பார்த்தே அறியப்பட வேண்டும். அது ஒரு பிரித்துச் சேர்க்கப்படும் புதிரைப்போல மீள்-அமைக்கப்பட வேண்டும். மாறாக ஒரு காவியத்தின் புராணத்தன்மைக்கு அறிவியல் சான்று அளித்தல் என்பது 'முப்புரம் செற்றனன்' எனக் கூறும் மூடர்களின் செயல்.