புராணங்கள் : ஒரு பார்வை

திரு மூலர், ஸ்ரீ அரவிந்தர், ஆனந்த குமாரசாமி, கார்ல் உங், ஜோசப் காம்பெல், கோசாம்பி, ஜெயமோகன் என புராணங்களின் அனைத்து பரிமாணங்களையும் பரிணாமத்தையும் கண்டு வியந்திட பகிர்ந்திட

Thursday, November 09, 2006

அமெரிக்க விண்வெளி நிறுவனம் கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

அல்லது ஒரு தொன்மம் எப்படி அறியப்பட கூடாது?
2002 அக்டோபரில் 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ' பத்திரிகையில் நாஸாவின் செயற்கை கோள் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்களில் இலங்கைக்கும் பாரதத்திற்கும் இடையில் ஒரு 'பாலம் ' இருப்பதை கண்டு பிடித்துள்ளதாகவும் அது 1,750,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் இது இராமாயணத்தின் திரேதா யுக காலத்துடன் ஒத்து போவதாகவும் கூறியது. பொதுவாக இவ்வாறு நம் நம்பிக்கைகளுக்கு வலுவூட்டும் அறிவியல் 'கண்டுபிடிப்புகள் ' உடனடியாக காட்டுத்தீ போல பரவி விடுகின்றன. இன்று இத்தகைய காட்டூத்தீ பரவலுக்கு மூல காரணமாகவும் பரவும் ஊடகமாகவும் இணையம் இருந்து வருகிறது.


'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸின் ' செய்தி எங்கிருந்து பெறப்பட்டதென்பதை மிக சரியாக கூறமுடியாவிட்டாலும் நுறெ¢றுக்கு தொண்ணுெறு சதவிகிதம் இணையத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதே தன்மையுள்ள ஒரு செய்தி விவாதத்திற்காக http://www.indolink.com/Religion/r091702ெ130924.php என்னும் இந்திய தர்மங்களுக்கான இணைய தள விவாத களத்தில் கிடைக்கிறது. இச்செய்தியின் தன்மை பெரும்பாலும் அறைகுறையாக இந்திய கலாச்சார அறிவு கொண்ட ஏதோ மேற்கத்திய மூளையின் விளைவே என எண்ண வைக்கிறது.உதாரணமாக, 'இப்பாலத்தின் வளைவும் காலமும் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை காட்டுகிறது ' என்கிறது இச்செய்தி. எப்போதிலிருந்து ஒரு புகைப்படத் தோற்றத்திலிருந்து ஒரு நிலத்தின் மேல் பகுதியின் காலத்தை நிர்ணயம் செய்யும் தொழில் நுட்பத்தை நாசா உருவாக்கியது ? பின்னர் 'பாலத்தின் ' காலத்தை 1.750,000 ஆண்டுகள் எனக் கூறும் இச்செய்தி, இக்காலம் குறித்த 'தகவல் ' இந்த இடத்தில் நிலவி வரும் 'மர்மமான புராணக் கதையான இராமாயணம் ' ( 'mysterious legend ') நிகழ்ந்த காலகட்டமான திரேதாயுக காலத்திற்கு ஒத்திருப்பதாக கூறுகிறது. என்றிலிருந்து இராமாயணம் 'மர்மமான புராணக் கதை 'யாயிற்று ? தெளிவாகவே இது ஒரு நிலை பிறழ்ந்த மூளையில் உதித்த மோசடி வேலை.


உதாரணமாக எங்கள் ஊரில் 'தாடகை மலை' என ஒரு மலை உள்ளது. ஒரு பெண்ணின் வடிவம் கொண்ட மலை. இராமன் அம்பு எய்து கொன்ற தாடகை மலையாகி வீழ்ந்தாள் என பாட்டி சொல்லி கேட்டதுண்டு. ஒரு தொன்மம் நிலப்பரப்பின் இயற்கை அமைப்புகளுடன் எவ்விதத்தில் பொது பிரக்ஞையில் இயைகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. இராமாயணம் எந்த அளவு நம்மில் இரண்டற கலந்துள்ளது என்பதற்கான சான்றும் கூட. ஆனால் இங்கு நடத்தப்பட்ட நிலவியல் பரிசோதனைகளில் நிலத்து உயிர்ம சத்து (organic carbon content) சிறிது வேறுபடுகிறது என வைத்துக்கொள்வோம் அதைவைத்து இது தாடகையின் உடல் எனக் கூறினால் அது எந்த அளவு நம்மை நாமே அவமானப்படுத்தும் செயல் என நினைத்துப்பாருங்கள். அதே நேரத்தில் தொன்மம் பாரதமெங்கும் இத்தகைய புனித நிலப்பரப்புகளை (sacred landscapes என்போமா) உருவாக்கியுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.


ஆடம்ஸ் பிரிட்ஜ் என காலனியாளர்களாலும், 'இராமனின் பாலம் ' என நம் நாட்டவராலும் கூறப்படும் பவள படிம தீவுக் கூட்டங்களின் அழகிய புகைப்படங்கள் உள்ளன.


மேலே நீங்கள் பார்த்தது நாசா செயற்கை கோள் புகைப்படம காட்டும் அதே நிலப்பரப்பினை அதனைவிட தெளிவாக பாரத செயற்கை கோளான ரிசோர்ஸ்ஸாட் படமெடுத்துள்ளது. பால அமைப்பு பவளப்பாறைத் தொகுப்பேயன்றி அது மானுட உருவாக்கம் அல்ல என்பதனை இப்புகைப்படம் நிரூபிக்கிறது. (http://www.isro.org/pressrelease/ph2.jpg)
திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்களை காணலாம். இவை எல்லாமே எவ்வளவு அழகாக ஒரு காவியம் நம் தேசத்தின் மக்களின் உணர்வுகளோடும் நம் தேச மண்ணிலும் இரண்டற கலந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. ஆனால் நாசா புகைப்படத்தை '1,750,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலத்திற்கான ஆதாரமாக காணுவது ' அப்புகைப்படத்தின் அழகையும் இராம காதை நம்முள் இரண்டற கலந்தியங்கும் தளத்தையும் கொச்சைபடுத்துவதாகும்.


துரதிஷ்ட வசமாக இச் 'செய்தி 'யை இந்திய ஊடகங்கள் கேள்வியேதுமின்றி ஏற்றதும் மற்றும் சில மின் அஞ்சல் விவாத மற்றும் உரையாடல் குழுக்களில் இராமயணமே நாசாவால் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது போன்ற கருத்துகள் பரவியதும் நாம் எந்த அளவு தாழ்வு மனப்பான்மையில் மூழ்கியிருக்கிறோம் என்பதனை காட்டுகிறது. இராம காதையின் உள்ளார்ந்த நிகழ்வுகளின் வரலாற்றடிப்படை குறித்து பொதுவாக உண்மையாகவே இருக்க முடியும் என்பதே பல வரலாற்றறிஞர்களின் முடிவு. வேத காலத்திற்கு சற்று பின்னே இராமயணம் இயற்றப் பட்டிருக்க வேண்டும். வேத தொகுப்பிற்கு சற்று (சில நூற்றாண்டுகள்) பின்னாக இராமகாதை இயற்றலுக்கு சற்று முன்னதாக இராம காதையின் உள்ளார்ந்த நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டும்.


இயற்கை உருவாக்கமான பாலத்தன்மை கொண்ட பவளத்தீவுதொடர்களை 'பாலமா 'க்கி நாஸா மூலம் இராமாயணத்திற்கு அறிவியல் சான்றிதழ் வாங்க முற்படுவது மிகத் தவறானது. இத்தகைய தன்மைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். தொடக்க காலம் முதலே புராணங்களை நேரடி உண்மையென நம்பும் போக்கை நம் ஆன்மீக அருளாளர்கள் கண்டித்து வந்துள்ளனர். இராம காதை இதிகாசமெனினும் அதன் புராண ,கவித்துவ மற்றும் அகவய கூறுகளை வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்தறிவது அவசியம். இம்முறையில் 'சீதாயாம் சரிதம் மகத் ' என வால்மீகி மகரிஷியால் அழைக்கப்பட்ட காவியமான இராமாயாணம் நம் ஆன்மீக மற்றும் சமுதாய உயர்வுக்கான பொக்கிஷமாகக்கூடும். மாறாக 1,750,000 வருடங்களுக்கு முன் வெறும் கற்கால கருவிகளை பயன்படுத்திய நம் குரங்கு-மானுடவின தொல் மூதாதைகளை இராமராக மாற்றும் வக்கிரம் தேவையற்றது.


'முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்'எனும் திருமந்திர வாசகத்தின் அறிவியல் பார்வை இவ்விஷயங்களில் சறுக்கி விழாமல் நம்மை வழிநடத்தட்டும். தொன்மங்கள் அக நிகழ்வுகளை விளக்கிடும் ஒரு மொழி அம்மொழி இம்மண்ணில் செம்மை அடைந்தது மட்டுமன்றி அதனை மேலும் மேலும் மெருகடைய செய்து அதனை ஒரு அறிவியல் துறையாகவே மாற்றியுள்ளது நம் மரபு. துரதிர்ஷ்டவசமாக பகுத்தறிவு என்னும் பெயரில் இந்த புராணமரபு உதாசீனப்படுத்தப்பட்டது மட்டுமின்றி அதனை மரபு நீக்கம் செய்யவும் அது உண்மையான மரபல்ல எனக் கூறவும் காலனிய ஆதிக்க தாக்கம் பெற்ற 'பகுத்தறிவுவாதிகள்' முயன்றனர். இதே மனத்தாக்கத்தின் மற்றொரு விளைவே புராண மரபுகளுக்கு சரித்திர ஆதாரத்தினை தேடும் போக்கு. எனில் புராண நிகழ்வுகளுக்கு சரித்திர மையக்கரு இருந்திருப்பதே இயலாத ஒன்றா? நிச்சயமாக இல்லை. வரலாற்று மையமும் புராணத்துவ தன்மைகளுமாக இணைந்து பரிணமிக்கும் ஒரு ஜீவ இயக்கமாகவே புராணம் காணப்பட வேண்டும். ஒரு புராணத்தின் வரலாற்று கரு அறிவியலின் உரைகல்லில் தேய்த்துப்பார்த்தே அறியப்பட வேண்டும். அது ஒரு பிரித்துச் சேர்க்கப்படும் புதிரைப்போல மீள்-அமைக்கப்பட வேண்டும். மாறாக ஒரு காவியத்தின் புராணத்தன்மைக்கு அறிவியல் சான்று அளித்தல் என்பது 'முப்புரம் செற்றனன்' எனக் கூறும் மூடர்களின் செயல்.

Thursday, November 02, 2006

உண்மை நிகழ்வா உலகப் பெரும் ஊழி?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

உலகத்தையே அழித்திட்ட வெள்ளப்பெரு ஊழி குறித்து பல சமுதாயங்களின் புராணங்கள் பேசுகின்றன. இவற்றுள் மிகப் பழமையானது கில்காமெஷ் தொன்மக்கதையே ஆகும்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒரு தொன்மவீரன் இந்த பெரு ஊழியிலிருந்து தப்பி பின் மீண்டெழுந்த மானுடத்தின் தந்தை என போற்றப்படுகிறான். இந்த ஊழி மற்றும் புனர் எழுச்சி
என்பதே ஒரு தொன்மப்படிமமாக இருக்கலாம். பல நாகரீகங்கள் இயற்கை சீற்றத்தினை இறைவனின்/கடவுளரின் தண்டனையாக கருதின. அழிக்கப்பட்ட சமுதாயங்கள் அவை செய்த
பாவத்தினால் அழிந்ததாகவும் கருதின. (இதில் பண்டைய தமிழரை ஒரு நல்ல விதிவிலக்கென கூறலாம். பின்னாளில் போலி-வரலாற்று பேர்வழிகளால் கண்டமாக்கப்பட்டு அறிவியல் மதிப்பிழந்து நிற்கும் குமரி நிலநீட்சி கடல் நீர்மட்ட உயர்வால் அழிந்த தொல்-வரலாற்று குடியிருப்புகளைக் குறித்த நினைவாக இருக்கலாம். ஆனால் கற்பனையில் தேர்ந்தவர்களும் ஆன்மச்செழுமையில் எவருக்கும் குறையாதவர்களுமான தமிழர் எந்த தெய்வ தண்டனையாகவும் இந்த அழிவு நினைவுகளின் தொன்ம உருவாக்கத்தில் குறிப்பிட்டிடவில்லை.) ஆனால் இந்த தொன்மப் படிமம் விவிலியத்தில் நுழைந்த பின்னர் வரலாற்று உண்மை எனும் அந்தஸ்தை பெற்றது. பல நாடுகளின் வரலாற்றினை எழுதிய கிறிஸ்தவ மத துறவிகள் அந்நாடுகள் எங்ஙனம் நோவாவின் (விவிலிய ஊழி நாயகன்) சந்ததிகளால் அந்தந்த பிரதேசங்கள் குடியேற்றம் அடைந்தன என்பதனை விவரிக்கலானார்கள். இசுலாமிய மீள்-வாதத்திலும் நோவாவின்
வெள்ள ஊழி உலகளாவிய சரித்திர நிகழ்ச்சியாக இடம்பிடிக்க ஆரம்பிக்கலாயிற்று. அண்மைக்காலங்களில் இந்த நோவாவின் ஊழிக்கான நிலவியல் ஆதாரங்கள், நோவாவின் பேழை (ark) துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் கதை (உதாரணமாக காண்க: நோவா பிரளயத்தை சரித்திர உண்மை நிகழ்வு என வாதிடும் ஒரு அடிப்படைவாத வலைப்பதிவு இங்கு.

இத்தகைய போக்குகள் - தொன்மங்களை நேரடியாக பொருள் கொள்ளுதல் அனைத்து சமயங்களிலும் உண்டு. பவளப்பாறை அமைப்புகளை இராமன் கட்டிய பாலத்துக்கு
ஆதாரமாக கூறும் போக்கு போன்றது இது. ஆனால் ஆபிரகாமிய நெறிகளில் -குறிப்பாக எவாஞ்சலிக்கல் மற்றும் வகாபிய போக்குகளில்- இந்த போக்கு பிரச்சார வேகத்துடன்
எழுந்து தன்னை சரித்திர உண்மையாக பிரகடனம் செய்து வருகிறது. "முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்; முப்புரமாவது மும்மல காரியம்" என்பார் திருமூலர். தொன்மத்தை
அகத்துவ பயணத்தின் குறியீட்டு கதையாடலாக மாற்றுவது எந்த அளவு ஆரோக்கியமானதோ அந்த அளவு ஆரோக்கியமற்ற அறிவியல் விரோத போக்கு நேரடி பொருள் கொண்டு
போலி வரலாறு திரிக்கும் அடிப்படைவாத போக்கு. தொன்மங்களின் ஆதார ஆற்றலையே அழிக்கும் குறுகலான பார்வை இது. மேலே சுட்டிய அடிப்படைவாத பார்வை எவ்வாறு
புராணங்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எனவே அவற்றிலுள்ள தவறுகளை இங்கு காணலாம்.


'முஹம்மதே! இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை.
எனவே பொறுமையைக் கடைபிடிப்பீராக! நம்மை அஞ்சுவோருக்கே நல்ல முடிவு உண்டு.' 11 : 49 - குர்ஆன்.
இது போன்ற செய்திகள் அன்றைய அரபு மக்கள் அறிந்திருக்கவில்லை. இத்தனை காலமாகியும் இவை எல்லாம் நமக்கு புதிய செய்திகளாகவே தெரிகிறது. மக்கா,மதீனா, சிரியா,எமன் போன்ற நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்த முகமது நபி துருக்கி நாட்டில் உள்ள ஜூதி மலையில் நோவாவின் கப்பல் இன்றும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை எப்படி அறிந்திருக்க முடியும்? என்ற கேள்வி வருகிறதல்லவா?


மெசபடோமியா பிரதேசத்துடன் அன்றைய அராபிய பிரதேசத்திற்கு நல்ல தொடர்பிருந்தது, வியாபார தொடர்பும் இருந்தது. இந்த ஊழிக்கதை அராபியருக்கு தெரிந்திருக்கவே
செய்தது. மேலும் தமது புனித வரலாற்றில் இத்தொன்மத்தை இணைத்துக்கொண்ட யூத மக்களும் அங்கு வாழ்ந்தனர். எனவே "இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை." என குரான் கூறியிருப்பது வெள்ள ஊழிக்காதையாக இருக்கும் பட்சத்தில் குரானில் தகவல் பிழை உள்ளதென்றே கருதவேண்டும். துருக்கியில் உள்ள மலையில் நோவாவின் பேழை ஒதுங்கியது என்பதும் ஆதாரமற்றதாகும். இது குறித்து பல பதிவுகள் பல மோசடிகள் வெளியாகியுள்ளன. ஊழி என்பதே சுமேரிய பிரதேசத்தில் நிகழ்ந்த வட்டார நிகழ்வாக இருக்கலாம். இதுவே பின்னாளில் தொன்மமாக உரு பெற்றிருக்கலாம் எனக் கருதுகிறார் ஐசாக் அஸிமாவ்.

சுமேரிய தொன்மங்களுக்கும் விவிலிய பிரளய விவரணத்துக்கும் இருக்கும் இணைத்தன்மைகளை சுட்டிக்காட்டுகிறார் அஸிமாவ். பொதுவாக இந்த சுமேரிய பிரளயம் ஏற்பட்டதாக கருதப்படும் காலமான கிறிஸ்து சகாப்தத்திற்கு முந்தைய மூவாயிரத்தை (கிமு 3000-2700) ஒட்டிய எகிப்திய பதிவுகள் எதுவுமே இந்த பிரளயத்தைக் குறித்து கூறாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.


அண்மையில் சர்ச்சையை கிளப்பியுள்ள மற்றொரு ஆராய்ச்சி வால்டர் பிட்மன் மற்றும் பில் ரையன் என்போரது. துருக்கியின் போஸ்போரஸ் (Bosphorous) நீர்வாயில் ஏற்பட்ட பெரு
வெள்ள அழிவுக்கு பின்னர் மெசபடோ மியா ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு நகர்ந்த மக்கள் இன குழுக்களே இந்த பெரு ஊழிக்கதையை கொண்டு சென்றிருக்கலாம் என அவர்கள்
ஊகிக்கின்றனர். 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திட்ட ஊழிப் பேரழிவு இது என அவர்கள் கணிக்கின்றனர். சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த ஆராய்ச்சிகள் மீண்டும் பெரூஊழி
தொன்மம் தொல்-நினைவில் வாழும் ஒரு வட்டாரம் சார்ந்த நிகழ்வே அன்றி பிற்கால இறைநூல்களில் விவரிக்கப்படும் இறை விருப்பு-வெறுப்பு சார்ந்த வரலாற்று நிகழ்வல்ல என்பதனைக் கூறிடும். (குரானில் கூறப்பட்டுள்ளதே நோவாவின் சமுதாயத்தை மட்டும் அழித்த பிரளயம்தான் என்று வாதிடலாம். ஆனால் இங்கு அடிப்படையே இந்த நோவா தொன்மமே வரலாறு அடிப்படையில்லாதது. ஊழி ஒரு வட்டார நிகழ்வின் தொல் பதிவு. அதன் வரலாற்றுக் கணக்கு விவிலிய/குரானிய காலகணக்கிற்கு ஒத்துவராத ஒன்று.)


இந்திய வேத இலக்கியங்களில் உலகழிக்கும் பெரு ஊழி குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. வேதத்தில் இல்லாததால் பொய் என்று சொல்ல வரவில்லை. மாறாக உலகளாவிய
அழிவென்றால் அது வேதத்திலும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அவை குறித்த குறிப்பெதுவும் இல்லை என்பது உலகளாவிய ஊழி என்பது தொன்ம பெரிதுபடுத்தலே ஆகும்.
பிற்கால புராணங்களிலேயே உள்ளது. இதிகாசங்களில் துவாரகை அழிவு குறித்து குறிப்பு வருகிறது. அதுவும் கடல்கோள் என்பதாக இருக்கிறது. அதுவும் முழு உலகு சார்ந்த அழிவு
இல்லை. ஆக, நோவா, யுத்னபிஷ்டிம், மனு போன்ற கதாபாத்திரங்கள் தொடர்புடைய பெருஊழி என்பது தொன்ம உருவாக்கம் மற்றும் அதன் விரிவடைதலே ஆகும்.


'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞசிக் கொள். வானமே நீ நிறுத்து!' என்று கூறினோம். தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலையின் மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமானோர் எனவும் கூறப்பட்டது. குரான் 11 : 44

மேற்கூறிய அடிப்படைவாத பதிவில் ஜுதி மலை துருக்கியில் உள்ள மலைத்தொடராக கூறப்பட்டுள்ளது. ஆனால் விக்கிபீடியா பதிவு முக்கிய விஷயங்களைக் கோடிட்டு காட்டுகிறது:
"ஜூதி மலைக்கு துருக்கியில் குடி-தாக்(Cudi-Dagh) என பெயர். இதற்கு துருக்கியில் 'மிக உயர்ந்த' அல்லது 'உயரங்கள்' என அராபியில் பொருள். கிழக்கு துருக்கியில் பல மக்களும் சில இஸ்லாமிய அறிஞர்களும் இதுவே அராரத் என கருதுகின்றனர். ஆனால் குடி-தாக் வான் ஏரிக்கு தெற்கே அமைந்துள்ளது. அதன் உயரம் 7700 அடி ஆகும். உள்ளூர் வாசிகள் இம்மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்துக்கு நோவாவின் பேழை மிதந்து சென்றது என கருதுகின்றனர். ...ஜுதி என்றும் ஒரு மலை உள்ளது. அராரத் என்றும் ஒரு மலை உள்ளது. இரண்டுமே விவிலிய விவரணத்தில் வரும் அராரத் (உரர்து) பகுதியில் அமைந்துள்ளன. பைபிளும் குரானும் ஒரே குரலில் பேழை வந்தமர்ந்த இடத்தைக் குறித்து பேசுவது சாத்தியமே. அராரத் மலையும் ஜுதி மலையும் ஒரே மலைதானா? சிலர் இவ்விரு பெயர்களையும் ஒன்று போல மாற்றி மாற்றி பயன்படுத்துவதை காணலாம்."
முகமதுவின் காலத்திற்கு முன்னரே அராரத் மலைத்தொடரும் நோவாவின் பேழையும் இணைத்து பேசப்பட்டுவிட்டன. சிரியா ஈராக் ஈரான் ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் உள்ள ஜுதி மலைத்தொடர் அராபியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்க வழியில்லை. அத்துடன் ஏற்கனவே யூதேய-கிறிஸ்தவ வழக்காடல்களில் அராரட் மலையில் நோவாவின் பேழை குறித்து அறிந்தவராகவே முகமதுவும் இருந்திருப்பார்.மேலே கூறிய அடிப்படைவாத வலைப்பதிவு பின்வருமாறு வியப்படைகிறது.
மக்கா,மதீனா, சிரியா,எமன் போன்ற நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்த முகமது நபி துருக்கி நாட்டில் உள்ள ஜூதி மலையில் நோவாவின் கப்பல் இன்றும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை எப்படி அறிந்திருக்க முடியும்?
என வியப்படைகிறது. ஆனால் மேலே உள்ள வரைப்படத்தை பார்த்தால் இந்த வியப்பு அவசியமற்றதென்று புரியும். இன்றைய துருக்கியின் சிரியா ஈராக் அருகேயுள்ள பகுதியில் மெசபடோ மிய நாகரிகத்தொட்டில் பிரதேசத்தின் அருகிலேயே இந்த பெரு வெள்ள ஊழி தொன்மத்தொடர்பான நில அமைப்புகள் அமைந்திருக்கின்றன என்பதனைக் காணலாம். இதில் விசேஷ இறைசெய்தி இறக்கம் எதுவும் தேவையில்லை. வட்டார கதைகளின் பரவுதலே போதுமானது. வானவர் கபிரியேல் தேவையில்லை சாதாரண மானுடத்தின் கதைசொல்லும் திறனே போதுமானது.இன்னமும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த ஜூதி என்கிற பெயரில் தெற்கரேபியாவில் ஒரு மலை இருப்பதுதான். துருக்கியில் இருக்கும் ஜூதி மலைக்கு 200 ஆண்டுகளாகவே அந்த பெயர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இஸ்லாமியர் வருவதற்கு முன்னரே கிறிஸ்தவ மடாலயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது (பார்க்க: http://www.islamonline.net/english/Science/2002/10/article07.shtml)

இம்மலைத்தொடரில் அவ்வப்போது ஏதாவது ஒரு சிகரத்தில் நோவாவின் பேழை அகப்பட்டதாக புரளி கிளம்புவதும் பின்னர் அது தவறு என நிரூபிக்கப்படுவதும் ஏறத்தாழ வழக்கமான நிகழ்வாயிற்று. இதற்கு உடனடியாக சில கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் ஆதரவு/எதிர்ப்பு தெரிவிப்பதுவும் அவ்வாறே.
உதாரணமாக கூறவேண்டுமானால் இம்மலைத்தொடரில் ஈரான்-துருக்கி எல்லைக்கு வடக்கே இருமைல் கல்கள் தொலைவில் இருக்கும் துருப்பினார் (துருக்கி விமானப்படை கேப்டன் இல்ஹான் துருப்பினார் பெயரில்) அமைப்பு. படகு போல இருக்கும் இந்த அமைப்பு ரோன்வாய்ட் என்பவரால் நோவாவின் பேழையாக பிரபலப்படுத்தப்பட்டது (அன்னார் ஸியோன் மலை சவூதி அரேபியாவில் உள்ள ஜெபெல் அல் லாவ்ஸ் எனக் கூறியவர்) பின்னர் துருக்கியின் நிலவியல் அறிவியலாளர் முரத் அவ்ஸி தெள்ளத்தெளிவாக இது இயற்கையின் உருவாக்கமே அல்லாது பேழையல்ல என நிரூபித்தார். அதன் பின்னர் சிறிது நின்றிருந்த இந்த பேழை திருவிளையாடல் மீண்டும் தொடங்கியுள்ளது.
(முழு கட்டுரையையும் இந்த உரலில் காண்க: http://noahsarksearch.com/AvciMurat/TelcekerEarthFlow.pdf)

முதலில் குறிப்பிட்ட அடிப்படைவாத வலைப்பதிவு குறிப்பிடும் மலை சிகரம் குறித்து (17,000 அடி ஏறத்தாழ 5,200 மீட்டர்கள்) நேஷனல் ஜியாகிராபிக் அண்மையில் சில தகவல்களை வெளிக்கொணர்ந்தது. அச்சிகரத்தில் பேழை இருப்பதாக 1989 இல் தன்னந்தனியாக இச்சிகரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்ட அகமது அலி அர்ஸ்லான் பேழைக்கு 200 அடி தூரத்தில் தான் சென்றதாகவும் அதனை புகைப்படம் எடுத்ததாகவும் கூறுகிறார். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதன் உண்மையை சந்தேகிக்கின்றனர். ஒரு பேழை குறித்து ஆராய்ச்சி செய்பவர் கூறுகிறார்: 'அகமது பெரிய வாய் சவடால் காரர் ஒரு சமயம் தன்னிடம் நோவாவின் பேழையின் 3000 புகைப்படங்கள் இருப்பதாகவும் திடீரென 5000 புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறுவார்' இந்த தேடலை இயக்குகிற மெக்கிவன் 2003 இல் ஏற்பட்ட வெப்பமேற்றத்தினால் பனி உருகியதால் கிடைத்த சில செயற்கைகோள் புகைப்படங்களை இதற்கு ஆதாரமாக கூறுகிறார். ஆனால் இந்த படங்களின் அடிப்படையில் தேடுவது அத்தனை புத்திசாலித்தனமானது அல்ல என்றே தோன்றுகிறது. "இதெல்லாம் வெறும் நம்பிக்கை அவ்வளவுதான்" என்கிறார் லாரன்ஸ் காலின்ஸ். கலிபோர்னிய பல்கலைக்கழக ஓய்வுபெற்ற நிலவியல் பேராசிரியரும் நிலவியல் புகைப்பட ஆராய்ச்சியாளருமான இவர் இவ்வாறு மனிதரால் உருவாக்கப்பட்டதாக தோன்றுகிற ரீதியில் புகைப்படம் எடுக்கப்பட்டவை அருகில் சென்று பார்க்கையில் அவ்வாறில்லதாதாகிவிடும் என சுட்டிக்காட்டுகிறார்.பொதுவாக நிலவியலாளர்கள்15000 அடி உயரத்தில் கப்பல் நிற்பதெல்லாம் இயலாத காரியம் என்றே கருதுகின்றனர். (நேஷனல் ஜியாகிராபிக் செய்தி செப்டம்பர், 2004)

இதற்கிடையே 2005 இல் காஸ்மோபோஸிக் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த அறிவியலாளர்கள் இந்த 'நோவா பேழை'யும் இயற்கை உருவாக்கமே என்பதனை அறிவித்துள்ளனர். http://news.nationalgeographic.com/news/2004/09/0920_040920_noahs_ark.html

Labels: ,

Wednesday, November 01, 2006

கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [2]

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கில்காமெஷ் காவியம் மேற்கின் அதி பழமையான முழு காவியமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய தொன்மப் படிவத்தை அது உள்ளடக்கியுள்ளது. மரணத்தை
வெல்ல முயலும் மானுடத்தின் தேடல் அது. நிரந்தர வாழ்வின் இரகசியத்தை தேடும் பயணம். இறப்பிலிருந்து விடுதலை. மரணம் குறித்த அச்சம். தனது மரணத்தை அமைதியாக ஏற்கிறான் என்கிடு. ஆனால் என்கிடுவின் மரணத்தின் சாட்சியாக விளங்கும் கில்காமெஷுக்கு அதுவே தூண்டுதலாக அமைகிறது. அதுவே அவனது மரணத்தை காட்டுகிறது.

அண்மையில் வெளியான ஸ்டார்வார்ஸ் திரைப்படத்தில் ஜெடை வீரனான அனாகின் ஸ்கைவாக்கர் டார்த் வாடராக மாற அவனை தூண்டுவது மரணத்த்தின் அச்சமே. ஹாரி பாட்டரில் வரும் லார்ட் வோல்டர்மார்ட் அஞ்சுவது மரணத்தையே.
பிரபு டிராகுலாவின் மாற்றம் அவன் மனைவியின் மரணத்தை தொடர்ந்து நிகழ்வதாகும். மரணமற்ற நித்தியவாழ்விற்கு இரத்தம் அருந்தும் சடங்கு மேற்குலகில் இரு துருவங்களிலும் இயங்குவதாகும். எதுவாயினும் மேற்கின் பிரக்ஞையில் மரணத்தை வெல்லும் மகா இச்சையின் தூண்டுதலின் வேர்களை கில்காமெஷிலிருந்து காணமுடியும்.
அது போலவே மூன்றில் ஒருபாகம் இறைத்தன்மையும் ஒரு பாகம் மானுடத்தன்மையும் கொண்ட மேய்ப்பனாகவும் அரசனாகவும் திகழும் புராண நாயகன் வழக்கு மேற்கத்திய பிரக்ஞையில் இருப்பதை காட்டுவது இது. ஏசுவின் உடலில் இருந்து இரத்தமும் நீரும் வெளிவந்த (யோவான் 19:34) கூற்று இதிலிருந்தே எழுந்ததாகும். கிரேக்க புராண மரபில் கடவுளரின் உடலில் ஓடுவது நீரே ஆகும். ஏசு மனிதகுமாரன் தேவகுமாரன் ஆகிய இரண்டும் என்பதால் அவரது உடலிலிருந்து இவை இரண்டும் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவிலிய கதையாடலின் வேர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனிலிருந்தன.


என்கிடு வந்த பின் ஏன் கில்காமெஷ் மாறிவிட்டான்? ஷெல்டன் கோப் மனநல சிகிட்சையாளர். மனநலசிகிட்சையை ஒரு புண்ணிய யாத்திரையாக காண்பவர்.

தன்னுடைய புகழ்பெற்ற 'If you meet Buddha in the road kill him' எனும் நூலில் ஒரு அத்தியாயம் கில்காமெஷுக்கு ஒதுக்குகிறார்.
"ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது என்கிடு இருக்கிறான் - அவனது மறுபாதி அவனது மறைந்திருக்கும் சுயம். எந்த அளவுக்கு ஒரு மனிதன் இந்த மறைவான சுயத்திடமிருந்து தன்னை விலக்கி வைத்துள்ளானோ அந்த அளவு அவது வாழ்க்கை வெறுமையும் பிடிப்பும் இல்லாத கேலிக்கூத்தாகவே அமைந்திருக்கும். என்னிடம் வரும் அத்தகைய ஒரு யாத்திரீகனுக்கு (மனசிகிச்சை பெற வருபவனுக்கு) நான் அருரு தேவியைப் போலவே அவனது மறைவான சுயத்தினை அறிமுகப்படுத்த முயல்கிறேன்."
என விளக்குகிறார் ஷெல்டான்.பி.கோப் ('If you meet Buddha...' பக்.22)

அதே நேரத்தில் சுயத்தின் இருமைத்தன்மை என்பது கில்காமெஷ் கதைக்கு நடுவோட்டமாக இருப்பினும் சுயத்தின் இருகூறுகளின் பாலியல் தன்மையைக் குறித்து அது அறியாமையுடனேயே இருப்பதாக கருதுகிறார் கோப். பெண் அதில் ஒரு மயக்கும் பொருளாகவே அமைந்துள்ளாள். (அதே, பக்..23) இறுதியாக கில்காமெஷின் முக்கியத்துவம் என்ன?

"மிகப் பல சமயங்களில் நான் என் இறப்பு நிகழ்ந்துவருவதை -நாம் அனைவருமே இந்த மரணப்பிணியால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதனை- மறந்துவிடுகிறேன். அத்தருணங்களில் நினைத்திட வேணுமென்பதனை நினைந்திடாத அத்தருணங்களில் நான் ஆட்டமாடுகிறேன். எனக்கு வாழ்வின் மற்றும் மரணத்தின் மடத்தன்மை, தவறவிட்ட சாத்தியங்கள், சாகஸத்தனங்களின் நினைவுகள், தவறவிட்ட பூரணத்துவத்தின் நினைவிசை அலைகள்,...ஏன் தோழர்களின் அன்பு - இவை அனைத்துமே மரணமிழைக்கும் இகழ்வின் முன் தோற்றுவிடுவதை கில்காமெஷின் யாத்திரை எனக்கு நினைவுபடுத்துகிறது. கில்காமெஷ் - என் சகோதரன்- அவனது புண்ணிய யாத்திரை என்னை மறக்கவிடுவதில்லை." (பக். 43)


காம்பெல்லை பொறுத்தவரையில் கில்காமெஷ் கதையில் வரும் சிதூரியின் அறிவுரையில் யூதவிவிலியத்தின் (கிறிஸ்தவர்களின் 'பழைய' ஏற்பாடு) பிரசங்கி பாடல்களில் பின்னாளில்
எதிரொலிப்பதைக் காட்டுகிறார். உதாரணமாக

"இரவும் பகலும் ஆனந்தமாக இரு. நடனமாடு விளையாடு. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்கட்டும். உன் தலை சுத்தமாக இருப்பாதாக. நீ சுகந்தங்களுடன் நீராடு உன் கையினை பற்றும் குழந்தையின் ஸ்பரிசத்தில் இன்பத்தினை உணரு. உன் மனைவி உன் இதயத்தில் ஆனந்திக்கட்டும்."
இது கில்காமெஷில் சிதூரி.
" நீ போய் உன் ஆகாரத்தை சந்தோசத்துடன் புசித்து உன் திராட்சை இரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி....உன் வஸ்திரங்கள் எப்போதும் வெள்ளையாயும் உன் தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக....நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்க்கையை அனுபவி"
(பிரசங்கி 9:7-9) அடுத்த வரியை வாசிக்கையில் இதற்கு கில்காமெஷ் காவியத்துடன் இருக்கும் தொடர்பு தெள்ளத்தெளிவாகும். "நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் ஞானமும் இல்லையே."(பிரசங்கி
9:10)

மேலும் காம்பெல் இறுதியில் பாம்பு மரணமின்மையின் இரகசியத்தினை விழுங்குவதைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்:

" எனவேதான் சர்ப்ப சக்தி அழிவின்மையின் சக்தியாக ஒருகாலத்தில் மானுடத்திடம் இருந்தது. அது எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கீழ்நிலை அடைந்துவிட்ட தேவியின் சக்தியாக ஆகிவிட்டது. இழந்த சொர்க்கத்தில் கபடற்ற அச்சமாக."
(Occidental mythology பக்.92)

பாரத தொன்ம சித்திரங்களிலும் கில்காமெஷின் தொன்மத்துடன் ஒற்றுமை கொண்ட சில சித்திரங்களை காணமுடியும்.
அங்க நாட்டரசன் தன் நாட்டு பஞ்சம் தீர்த்திட ரிஷ்யசிருங்கரை வரவழைக்கிறான், பெண்களையே அறியாத அவரை பெண்கள் மூலம் தன் நாட்டிற்கு வரவழைத்து அவருக்கு தனது மகளான சாந்தாவை திருமணம் செய்து வைக்கிறான் ரிஷ்யசிருங்கர் மானின் கொம்புகளுடன் பிறந்தவர் என்கிறது கதை. என்கிடுவின் தொடக்கத்தன்மையுடன் ஒப்பிடத்தக்கதாக இவ்விவரணம் விளங்குகிறது. சாயாகிரகமான ராகு சர்ப்பமாக அமுதத்தை விழுங்கிய புராணக்கதையும் இங்கு நினைவுக்கு வரலாம்.
ராகும் கேதுவும் அமுதத்தை அடைய பயன்படுத்தப்பட்ட சர்ப்பமான வாசுகியே என்றும் அது அமுதத்தை அருந்தியததால் ராகு கேது என பிளக்கப்பட்டது எனவும் மற்றொரு வழக்கும் உண்டு.

Tuesday, October 31, 2006

கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [1]

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


கிமு 1750களைச் சார்ந்ததாகக் கருதப்படும் அகாடிய மண்சுவடிகளிலிருந்தும் கிமு 650 களைச்சார்ந்த அசிரிய மண்சுவடுகளிலிருந்தும் பிற்கால ஹிடடைட்டில் மொழிபெயர்க்கப்பட்டு
வழங்கிவந்த பாடல்களிலிருந்தும் திரட்டப்பட்டு கில்காமெஷின் கதை அறிஞர்களால் சொல்லப்படுகிறது.கில்காமெஷ் மூன்றில் இருபங்கு தெய்வத்தன்மையும் ஒருபங்கு மனிதத்தன்மையும் உடையவன். வீரன். அவனது மக்களின் மேய்ப்பன். அவன் உருக் (Uruk) எனும் நகரினை ஆள்கிறான். இந்நகரின் பெரும் மதில்களைக் கட்டியவன் கில்காமெஷ். என்ற போதிலும் "தந்தைகளுக்கு மகன்களை அவன் விட்டுவைப்பதில்லை; தாய்களூக்கு புதல்விகளை அவன் விட்டுவைப்பதில்லை. கேள்வி முறையில்லை. இரவும் பகலும் அவனது ஆணவ அதிகாரமே நடந்து வருகின்றது." மக்கள் கலக்கமடைகின்றனர். அவர்கள் படைப்பு தெய்வமான அருரு தேவியிடம் சென்று முறையிடுகின்றனர். "நீயே கில்காமெஷை உருவாக்கினாய். இப்போது அவனுக்கு இணையானவனை படைத்திடு" என வேண்டுகின்றனர். இவர்களின் விண்ணப்பத்தினை கேட்ட அருரு தேவி விண்ணக தேவனான அனுவின் உருவினை ஒத்த களிமண் பதுமையை செய்கிறாள். அதனை பூவுலகுக்கு அளிக்கிறாள். அதுவே பராக்கிரமசாலியான என்கிடு ஆகிறது. அவன் உடல் முழுக்க மயிர் மயமாக இருக்கிறது. அவனது சடைகள் பெண்களின் குழல்கள் போல உள்ளன. மனிதர்களின் குடியிருப்புகள் குறித்து என்கிடு அறியான். அவன் மிருகங்களுடன் இணைந்து அவைகளில் ஒன்றாக வாழ்க்கை நடத்துகிறான்.
"அவன் மான்களுடன் மேய்கிறான். காட்டுயிர்கள் எங்கு நீர் அருந்துமோ அங்கு செல்கிறான். நீர்நிலைதனில் அவன் மனமும் அவ்விலங்குகளுடன் இன்பமடைந்திட"
அவன் வாழ்கிறான்.

அச்சமயம் கில்காமெஷின் வேடுவன் ஒருவன் வைக்கும் பொறிக்கு ஒரு விசித்திர மானுட விலங்கு (என்கிடு) தப்புவதை காண்கிறான். அவன் இந்த அதிசய விலங்கினைக் குறித்து கில்காமெஷிடம் கூறிட கில்காமெஷ் அதனை கானகத்தினின்றும் வெளிக்கொணர ஒரு கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நடனமாதினை (தேவதாசி) அனுப்புகிறான்.

"உன் மடியை அவனுக்குத் திறந்திடு உன் எழிலினில் அவனை
மயக்கிடு. அவன் உன்னைக் கவனித்ததும் உன்னிடம் வருவான். உன் ஆடையை நெகிழவிடு. அவனை உன் மேல் படரவிடு. பெண்ணாகிய உன் திறத்தினை காட்டு. அவனுள் காமத்தை மூட்டு. அவன் காமம் உன்னிடம் எழுந்திடும். அனைத்து உயிரினங்களும் அவனிடம் வேறுபாடு கொண்டிடும்."
அந்த தேவதாசியும் அவனை மயக்குகிறாள். ஆறு நாட்களும் ஏழு இரவுகளும் அவர்கள் கூடுகின்றனர். பின்னர் அவன் அவளிடம் திருப்தி அடைந்து எழுகிறான். அவனிடமிருந்து காட்டுயிர்கள் விலகிச்செல்கின்றன. தேவதாசியுடன் உருக் நகருக்கு வருகின்றான் என்கிடு. அங்கு அந்த மாது அவனை சிங்காரிக்கிறாள். அவன் கில்காமெஷ் போலவே இருக்கிறான். அனு-இஷ்தார் கோவிலில் இருக்கும் கில்காமேஷுடன் என்கிடு போரிடுகிறான். நிலமதிர கோவிலின் சுவர்கள் நடுங்க இருவரும் கட்டிப்புரண்டு சண்டை செய்கின்றனர். வெற்றி தோல்வி இன்றி நடக்கும் இந்த சண்டையின் இறுதியில் அவர்கள் நண்பர்களாகின்றனர். பிரிக்கமுடியாத இரு சகோதரர்கள்.


ஒரு புனித வனத்தில் இருக்கும் செவ்வகில் மரத்தினை (தேவதாரு வகை - cedar) வெட்ட இருவரும் புறப்படுகின்றனர். தெய்வங்கள் உறையும் இவ்வனத்தினை சிங்க முகம் கொண்ட
ஹுவாவா (அகாடிய வழக்கில் ஹுபாபா) காத்து வருகிறான். அவனை இருவருமாக சேர்ந்து சாமர்த்தியமாக வெல்கின்றனர். இப்போது கில்காமெஷின் தாய் தன் மகனின்
வெற்றிக்காக துதிக்கிறாள். கில்காமெஷ் இரவில் தூங்கி இறுதியில் செவ்வகில் மரத்தினை அடைகிறான். பின்னர் ஆதவ கடவுள் ஷமாஷை கில்காமெஷ் துதிக்கிறான். ஹுபாபா
குழப்பமடைகிறான். அவனால் சரியாக காணமுடியவில்லை. அவனது வசம் இருக்கும் ஏழு உன்னதங்களையும் எடுத்துவிட்டு என்கிடுவின் தூண்டுதலால் கில்காமெஷ் அவனது தலையை
துண்டாடுகிறான்.


என்லில் தெய்வம் இதனால் கோபமடைந்து ஹுவாவாவின் ஏழு உன்னதங்களையும் இந்த இருவரிடமிருந்தும் எடுத்துவிடுகிறார்.

வெற்றியுடன் கில்காமெஷும் என்கிடுவும் ஊருக்கு திரும்புகின்றனர். ஒருகாலத்தில் ஆணவம் நிரம்பிய கொடுங்கோலனாக கருதப்பட்ட கில்காமெஷ் இப்போது மக்களால் போற்றப்படுகிறான். அன்பு செய்யப்படுகிறான். கில்காமெஷ் ஊர்வலம் வருகிறான். ஊர் விழாக்கோலம் பூணுகிறது. கில்காமெஷ் தனது சிறந்த ஆடை ஆபரணங்களுடன் வலம் வருகிறான்.இஷ்டர் தேவி கில்காமெஷிடம் மயங்கி அவனை தன்னிடம் அழைக்கிறாள். ஆனால் கில்காமெஷ் அவளை மோசமாக திட்டி மறுத்துவிடுகிறான். அவள் இதற்கு முன்னர் அவளது காதலருக்கு செய்த தீமைகளை நினைவுபடுத்துகிறான் கில்காமெஷ். பறவையினை காதலித்து புணர்ந்த நீ பின் அதன் சிறகினை ஒடித்தாய்; குதிரையினை புணர்ந்த பின் அதனை கசையினால் அடித்தாய்; இடையனை மணந்து பின் அவனை ஓநாயாய் மாற்றினாய் அவனது சக இடையர்களும் நாய்களும் விரட்டிட செய்தாய்." என கூறுகிறான். ஆத்திரமடைந்த இஷ்டார் தனது தந்தையான அனுவிடம் சென்று சொர்க்கத்தின் காளை மாட்டினை கில்காமெஷ் மீது ஏவிட கூறுகிறாள். அனு இஷ்டரை எச்சரிக்கிறாள். சொர்க்கத்தின் காளை வெளிவந்தால் ஏழு ஆண்டுகள் பஞ்சம் ஏற்படும் என்கிறார். ஆனால் இஷ்டர் அந்த பஞ்சத்திலிருந்து தமது மக்களை காப்பாற்றிட தம்மிடம் வேண்டிய அளவு உணவு இருப்பதை கூறி கட்டாயப்படுத்துகிறாள். இந்த சொர்க்கத்தின் காளையை கில்காமெஷும் என்கிடுவும் இணைந்து வதைத்து அதன் இதயத்தை எடுத்து சூரியக்கடவுளுக்கு அளிக்கின்றனர். இது
குறித்தும் கில்காமெஷின் வெற்றி குறித்தும் புலம்புகிறாள் இஷ்டர்.

என்கிடு தானும் இஷ்டருக்கு இதே பதிலைத்தான் அளித்திருப்பேன் எனக்கூறுவதுடன் காளையின் வலது
தொடையை கிழித்து இஷ்டாரிடம் எறிகிறான். இஷ்டார் கோவில் தேவதாசிகளைக் கொண்டு சுவர்க்க காளைக்காக துக்க ஊர்வலம் நடத்துகிறாள். அதேசமயம்

"வீர புருஷர்களில் வீர புருஷன் எங்கள் கில்காமெஷ்; மனிதருள் மாபெரும் வீரன் எங்கள் கில்காமெஷ்"
எனும் கோஷங்களுடன் உர்க் நகர மக்களைக் கொண்டு ஊர்வலம்
நடத்துகிறான் கில்காமெஷ்.

என்கிடு நோய்வாய்ப்படுகிறான். ஹுவாவாவையும் சுவர்க்க காளையையும் கொன்றதற்கு கிடைத்த தெய்வ தண்டனை என அறிகிறான். வேடனையும் தேவதாசியையும்
நொந்துகொள்கிறான். அவன் கனவில் சூரியக்கடவுள் தோன்றி அவனை சமாதானப்படுத்துகிறார். அவன் காட்டினை விட்டு வந்ததால் கில்காமெஷ் கிடைத்ததை நினைவூட்டுகிறார். என்கிடு ஆறுதல் அடைகிறான். பன்னிரண்டு தினங்கள் நோய்வாய்ப்பட்டு மரணிக்கிறான்.

என்கிடுவின் மரணம் கில்காமெஷை வதைக்கிறது. அத்துடன் தனது வாழ்க்கையும் மரணத்தில் முடியவேண்டியது என்பதனை கில்காமெஷ் உணர்கிறான். மரணமின்மையை அடைய பிரயாணம் செய்கிறான். சந்திரக் கடவுளை தொழுகிறான். தெய்வங்கள் அனுப்பும் கனவுகள் வழிநடத்த அவன் செல்கிறான். சிங்கங்கள் சூழ்ந்த பாதைகள், கானகங்கள் என சென்று இறுதியில் சூரிய அஸ்தமனமாகும் மலை ஒன்றினை அடைகிறான். அங்கு தேள்மனிதர் காவல்காக்கும் பாதை ஒன்று திறந்துவிடப்படுகிறது. இருண்ட அப்பாதை வழியே அவன் செல்கிறான். அங்கு ஒரு அதிசய மரத்தினை காண்கிறான். கண்ணைப்பறிக்கும் அம்மரத்தினையும் அவன் தாண்டி செல்கிறான். இறுதியில் கடற்கரைக்கு வருகிறான்.

அங்கு சிதூரி எனும் பெண் அவனை வரவேற்று அவனது தேடலின் பொருளின்மையை கூறுகிறாள்:

கில்காமேஷ் நீ எதனை தேடி இத்தனை தூரம் வந்தாய்? அந்த வாழ்க்கை உனக்கு கிடைக்கப்போவதில்லை. கடவுளர் மனிதனை படைத்த போது மரணத்தை அவனுக்குரியதாக விதித்தனர். அமரவாழ்க்கையை தம்முடையதாக்கினர். ஓ கில்காமெஷ் உன் வயிறு புடைக்க சாப்பிடு. இரவும் பகலும் ஆனந்தமாக இரு. நடனமாடு விளையாடு. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்கட்டும். உன் தலை சுத்தமாக இருப்பாதாக. நீ சுகந்தங்களுடன் நீராடு உன் கையினை பற்றும் குழந்தையின் ஸ்பரிசத்தில் இன்பத்தினை உணரு. உன் மனைவி உன் இதயத்தில் ஆனந்திக்கட்டும்."
என்கிறாள். ஆனால் கில்காமெஷ் உறுதியாக இருக்கிறான்.

இறுதியாக யுர்ஷனாபி எனும் ஓடக்காரனின் ஓடத்தில் மரணக்கடலை கடக்கிறான் கில்காமெஷ். மரணமற்ற வாழ்வு வாழும் யுத்னபிஷ்டிம் என்பவனை அடைகிறான் கில்காமெஷ்.


"ஒரு வீடு என்றென்றும் இருக்கும் என்றா நாம் கட்டுகிறோம்?... வெறுப்பு
நிலமதில் என்றென்றும் நிலவுகிறதா? ஆறு என்றென்றும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகின்றதா?...தொல்பழங்காலமுதல் நித்தியம் என்பது இல்லவேஇல்லை"
என கில்காமெஷுக்கு சுட்டிக்காட்டுகிறான் யுத்னபிஷ்டிம். ஆனால் யுத்ன பிஷ்டிமே மரணமில்லா வாழ்க்கை வாழ்வதை பதிலுக்கு சுட்டிக்காட்டுகிறான் கில்காமெஷ். யுத்னபிஷ்டிம் தான் அந்நிலை எய்திய கதையை கூறுகிறான். யுத்னபிஷ்டிம் ஏழுநாள்-ஊழியின் போது அனைத்து உயிர்களையும் ஜோடியாக ஒரு பெரும் கப்பலை செய்து அதில் வைத்து காப்பாற்றியவன். ஆகவே தெய்வங்கள் அவனையும் அவன் மனைவியையும் தம்முள் ஒருவராக ஏற்றுக்கொண்டன. இது தமக்கு ஏற்படாது என உணருகிறான் கில்காமெஷ். அவனுக்காக பரிதாபப்படும் யுத்னபிஷ்டிம் ஏழு நாட்கள் தூங்காமலிருக்க கூறுகிறான். ஆனால் கில்காமெஷ் தூங்கிவிடுகிறான். பின்னர் நீருக்கடியில் இருக்கும் ஒரு செடியினை பிடித்து வரச்சொல்கிறான் யுத்னபிஷ்டிம்.

'அது முட்செடி அதன் முட்கள் உன் கையை கிழிக்கலாம் ஆனாலும் அதனை நீ கொண்டுவர வேண்டும்' என்கிறான். கால்களில் எடையைக் கட்டிக்கொண்டு நீருக்கு
வெகு ஆழத்தில் சென்று அந்த செடியை காண்கிறான் கில்காமெஷ். அதே நேரத்தில் ஒரு பாம்பு வந்து அந்த செடியை விழுங்கிவிடுகிறது. பாம்புகள் தோலுரித்து வாழ்வது
இதனால்தான். தோல்வியடைந்து வருகிறான் கில்காமெஷ். மரணமில்லா வாழ்க்கையை தேடுவதில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை கசப்புடன் ஜீரணித்து உருக் திரும்புகிறான். மற்றொரு கதையில் அவன் அச்செடியை எடுத்து ஊர் திரும்புகிறான். வழியில் அவன் குளிக்க போகும் போது அச்செடியின் மணத்தால் கவரப்பட்ட பாம்பு அதனை எடுத்து விடுகிறது. அழுகை பீறிட தோல்வியை ஏற்றுக்கொண்டு ஊர் திரும்பிய கில்காமெஷ் மீதி வாழ்நாட்களை அங்கேயே கழிக்கிறான்.

Thursday, October 26, 2006

மரணத்தை சந்தித்தல்-2 ருரு-ப்ரமத்வரா (ப்ரியம்வதா) மகாபாரதம்-ஸ்ரீ அரவிந்தர்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

அடுத்ததாக நாம் காணப்போவது மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் காணப்படும் ஒரு தொன்மக்கதை.

பிருகு முனிவரின் வழி வந்த பிரமதி ஒரு அப்சர மங்கையை மணந்ததால் பிறந்தவன் ருரு. ஸ்தூலகேச மகரிஷியின் ஆசிரமத்தில் வளர்ந்த ப்ரமத்வரா எனும் பெண்ணுடன் சிறுவயது முதல் ருரு கொண்ட நட்பு வளரவளர காதலாகியது. ஆனால் ஒரு நாள் சர்ப்பம் தீண்டிட இறக்கிறாள் ப்ரமத்வரா. துயரால் துடிக்கும் ருரு அசரீரியால் வழிநடத்தப்பட்டு தன் ஆயுளில் பாதியை அளித்து ப்ரமத்வராவை அழைத்து வருகிறான் ருரு.

இத்தொன்ம கதை மகரிஷி ஸ்ரீ அரவிந்தரால் 'காதலும் மரணமும்' (Love and Death) மூலம் மீள்-சொல்லப்பட்டது. இதில் ஸ்ரீ அரவிந்தர் செய்த மாற்றங்கள் புராணவியல் பார்வையில் முக்கியமானவை. ஸ்ரீ அரவிந்தரே இது குறித்து கடிதமொன்றில் குறிப்பிடுகிறார்:

"ருரு ப்ரமத்வரா தொன்மத்தில் -பெயர் ப்ரியம்வதா என மாற்றப்பட்டுள்ளது- அவளுக்கு சர்ப்பத்தினால் ஏற்படும் மரணமும் பின்னர் அவள் கணவன் தன் ஆயுளில் பாதியை அளித்து அவள் உயிரை மீட்பதுவுமே மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இது சாவித்திரிக்கு இணைகாதை என்ற போதிலும் கவித்துவ எழிலுடன் விஸ்தீரிக்கப்படாதமையால் பொதுவாக கவனிக்கப்படாது விளங்கியது. இக்கவனிப்பின்மையிலிருந்து மீட்டெடுக்க நான் இக்கவிதையில் முயன்றுள்ளேன். அம்முயற்சி முழுமையான வெற்றியடைய இக்கவிதைக்கு மேலும் இந்துதன்மை சிறப்பாக அளிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இக்கவிதை பலவருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது (1899 இல்) பாரத சிந்தனை மற்றும் பாரம்பரியத்தின் இருதயத்தினுள் நான் நுழைந்திடாத கால கட்டத்தில். (இக்கவிதையில்) கிரேக்க தொன்மங்களின் பாதாள உலகம், (ஸீயஸின் தண்டனை குழியாகிய) டாட்டரஸ் மற்றும் வாழ்க்கை காதல் மரணம் ஆகியவை குறித்த உணர்ச்சிபூர்வத்தன்மைகள் போன்றவற்றின் நிழல் பாரத புராண பாதாள லோகங்களில் படிந்துள்ளது. இக்கவிதையின் மைய கதை மட்டுமே மகாபாரதத்தினுடையது . காமன் ருருவை சந்திப்பது மற்றும் பாதாள உலகிற்கு செல்வது போன்றவை மூல கதையின் கவித்துவ போக்கில் தேவையாக உருவானவை."


இனி ஸ்ரீ அரவிந்தரின் வரிகள் சிலவற்றை காண்போம். அடைப்புக்குள் இருப்பவை வரிகள் கதையோட்டத்தில் எங்கு வருகின்றன என்பதைக் காட்ட:


[ருரு-ப்ரியம்வதா காதல் இன்பம்]


...
அனைத்துமே ஆனந்தமாக தென்றலும்
வாசமும் நிறங்களும் மலர்களும் அவற்றுடன் ஊடாடும் ஒளிக்கற்றைகளும்
வாழ்தலின் ஆனந்தம்
உலகின் மீது
ஆனந்தத்தின் ஆசை[ப்ரியம்வதா மரணம்]

...
அவள் அவள் காதலின் அழகத்தனையுடன்
ஓர் கணம் நின்றாள்
பின் மரணத்தில் உதிர்ந்தாள்
...
ஒரு சோக கதறலுடன்
உடல் வெளிறிட
குரல் முனகிட
அவள் உடல் குவிந்து விழுந்தது.
...
அவள் மேல் சாய்ந்தான் ருரு
இறந்த அவள் உதடுகள் பேசிட
அப்பசும் வனத்திடை கிடந்தாள் ப்ரியம்வதா...[ருருவின் வேதனை]

...
புவியின் பிரகாசிக்கும் உதாசீனத்தை அவன் உணர்ந்தான்
அத்துடன் முழுமையாக உணர்ந்தான்
தனிமையின் வேதனையின் இயலாமையை
...
வனத்தினூடே ஓலமிட்டு மரக்கிளைகளூடே புலம்பியழுது
மகத்தான வேதனை விண்ணோக்கி எழுந்தது அவனுள்
துயரம் மகத்தாக அவனை துடிக்க துடிக்க சுட்டெரித்தது.[மன்மதன் வருகை]
...
அங்கு நின்றிருந்தான் ஒரு பொன்னிறச் சிறுவன்
அழகு சொட்ட சொட்ட தரித்த உடை பாதியுடல் மூட.
...
அவர்களிருவரும் நடந்தனர் அந்த மர்மமான நதியின் அருகில்
கரைகள் பார்வையிலிருந்து விலகிட
நோக்குமிடமெங்கும் நீரால் நிரம்பிட
வானும் நீரினுள் அமிழ்ந்து காணும் நதிக்கரையினில் நின்றனர்.


[பாதாள பயணம்]

...
ருரு ஓலமிட்டான்: ...கேட்பாய் இந்த காதலன் புலம்பலை ஓ சமுத்திரமே!
உன் முடிவிலி பரப்பினில் ரிதத்தின் இயக்கம் உண்டெனில்
இந்த பூவுடலுடன் உனக்குள் என்னை சென்றிட விடுவாய்.
...
ராட்சத அலையால் மேலுயர்ந்துயர்ந்து அவனை
வாரி உள்ளிளுத்திட்டது
சமுத்திரம்.[எமன் முன்னால்]

...
விசித்திர மேடையொன்றில் எழும்பிற்று அரியாசனம்
அங்கு அச்சமுறுத்தும் அழகு அலங்கரிக்க அமர்ந்திருந்தான் எமதர்மன்
ருரு அவனுக்கு வணக்கம் செலுத்தினான்.
...
அவன் கொடுக்கும் வாழ்க்கை காலத்தின் மேன்மையை
அவன் காணட்டும் என்றான் எமன்
கால காட்சிகள்
மேன்மை கோலங்கள்
பூரணமும் புகழும் அடைந்த வாழ்வின் உச்சம்
அவன் முன் விரிந்தது...
...
தன் வாழ்வின் பாதியை எடுத்தெறிந்தான் அவன்
அத்தருணமே இடியுண்டாற் போல் வீழ்ந்தான்உயிர் மீட்டல்

...
நடுக்கத்துடன் அவன் தன் காதலியின் அன்புப்பெயரை
கூறி அவளை நெருங்கித்தொட்டிட
அத்தருணத்தில் அவளைப் பிணித்திருந்த
பாதாளத்தின் மௌன முடிச்சுகள் அறுந்தன.
..
புலரும் வைகறை தருணந்தனிலே
புவியின் அக்குழந்தைகள் இன்மொழி
கானகக் குயிலின் இசையுடன் கலந்து
ஒலித்தது எங்கும்.
.வார்த்தைகளற்று மகிழ்ந்தது பூமி
இச்சித்திரங்கள் ப்ரீதி ஜோஷியின் உருவாக்கம். இவற்றினை ப்ளாஷ் சித்திரத்தொகுப்பாக ஸ்ரீ அரவிந்தரின் வரிகளுடன் காண இங்கு சொடுக்கவும்.

Tuesday, October 24, 2006

மரணத்தை சந்தித்தல் - 1.நசிகேதன்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறதுநமக்கு மிகவும் தெரிந்த ஒரு தொன்மக் கதை கட உபநிடதத்தில் வருகிறது. ரிஷி வாஜசிரவஸ் யாகத்தின் போது கிழட்டு பசுக்களை தானமாக கொடுக்கிறார். இதனைச் சுட்டிக்காட்டிய மகன் நசிகேதனிடம் வெகுண்டு அவனை யமனுக்கு தானமாக அளிப்பதாக கூறுகிறார். உபநிடதத்தின் வார்த்தைகளில்:


நசிகேதன் தந்தையிடம் சென்று, "அப்பா என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான். இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்கு தந்தை, "உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன்." என்று கூறினார். [கட உபநிடதம் 1.1.4]


பின்னர் கலங்கும் தன் தந்தையை ஆறுதல் படுத்திவிட்டு எமனுலகு செல்கிறான் நசிகேதன். நசிகேதன் சென்ற போது எமன் அங்கு இல்லை. மூன்று நாட்கள் எமன் மாளிகையில் நசிகேதன் இருக்கிறான். மூன்று நாட்கள் மூன்று இரவுகள் அன்ன ஆகாரமின்றி தங்கியிருக்கும் நசிகேதனுக்கு மூன்று வரங்களை அளிக்கிறான் யமன். முதல் வரமாக நசிகேதன் தன் தந்தை தன்னிடம் ஆத்திரம் நீங்க வேண்டுமெனக் கோருகிறார். இரண்டாவது வரமாக சொர்க்கம் செல்லும் மார்க்கத்தினை கேட்கிறார். சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் யாகத்திற்கான அக்கினி இதயக்குகையில் இருப்பதாக எம தர்மன் கூறுகிறார். அவர் சொல்கிறார்:


நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப் பற்றி கேட்டாய். அது எனக்குத் தெரியும். அதை உனக்குச் சொல்கிறேன். விழிப்புற்றவனாக கேள். சொர்க்கத்தை தருவதும் பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது.[கட உபநிடதம் 1.1.14]


மூன்றாவதாக மரணத்துக்குப் பின்னால் மனிதன் நிலை குறித்து நசிகேதன் வினவுகிறார். எமனோ அது தேவர்களுக்கும் ஐயப்பாடு உள்ள இரகசியம் என்றும் வேறெதை வேண்டுமென்றாலும் கேள் என்றும் கூறுகிறார். ஆனால் நசிகேதனோ தமது நிலையில் உறுதியாக நிற்கிறார். நூறாண்டு வாழ்க்கை, புத்திர பாக்கியம், பொன், பொருள், குதிரை, பரந்த அரசு, பூமியில் அனைத்து ஆசைகளும் நிறைவேற்றிடும் வரம், நல்ல தேர்கள், அழகிய பெண்கள் என அனைத்தையும் அளிப்பதாகவும் நசிகேதன் தனது நிலையிலிருந்து விலகிட வேண்டும் எனவும் எமன் கூறுகிறார். ஆனால் நசிகேதன் இந்த ஆசைக்காட்டலுக்கு கூறும் மறுமொழி அழகானது.


மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் எல்லாம் நிலையற்றவை. அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீ சொன்ன குதிரைகள் ஆடல்கள் பாடல்கள் உன்னிடமே இருக்கட்டும். [கட உபநிடதம் 1.1.14]

இறுதியில் எமன் மரணமில்லா பெருவாழ்வின் இரகசியத்தை நசிகேதனுக்கு உபதேசிக்கிறார். நசிகேத மகரிஷி இந்த இரகசியத்தை உணர்ந்ததன் மூலம் மரணமில்லா பெருவாழ்வினை அடைகிறார்.


இந்த உபநிடத கதையில் பல தொன்மக் கூறுகளை காணலாம்.


  • மறுக்கப்படும் ஞானம்:
    மனிதருக்கு கிடைக்காமல் ஞானமானது ஒளித்து வைக்கப்படுகிறது. ஞானத்தின் குறியீடான அக்னி ப்ரொமீதஸால் ஸீயஸ் தேவனிடமிருந்து எடுத்து வரப்பட்டது. விவேகத்தை அளிக்கும் கனி மனிதர்களுக்கு விலக்கப்பட்டிருந்ததாக யூத புராணம் கூறும். இங்கும் எமன் நசிகேதனிடம் மறையறிவு விலக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் மேற்கத்திய புராணங்களில் விலக்கப்பட்ட ஞானத்தை தேடி அடைந்தவர்கள் நித்திய தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இங்கோ "மரணமில்லா பெருவாழ்வை அடைந்து இறை நிலை அடைகின்றார் நசிகேத மகரிஷி. மட்டுமல்ல இந்த ஞான மார்க்கத்தின் மூலம் அனைத்து மானுடமும் மரணமில்லா பெருவாழ்வை அடைந்திட முடியும்.

  • ஆசை காட்டல்:
    பின்னாட்களில் புராணங்கள் அனைத்திலும் தவம் செய்யும் முனிவர்களின் தவத்தை கலைத்திட தேவர்கள் அனுப்பும் தேவலோக பெண்களின் தொடக்கத்தை இங்கு காண்கிறோம். அவ்வாறே பௌத்த புராணத்தில் தவமிருக்கும் சித்தார்த்தரின் தவத்தினை கலைத்திட மாறன் முயன்றதையும் நாம் காண்கிறோம். ஏசு குறித்த புராண விவரணத்தில் அவரை சைத்தான் சோதிக்கிறான். ஏசுவுக்கு காட்டப்படும் ஆசைகள் அரசதிகாரம் சார்ந்தவை என்பதையும் புத்தருக்க்கு காட்டப்படும் ஆசைகள் புலனின்ப வகையைச் சார்ந்தவை என்பதையும் ஜோஸப்காம்பெல் குறிப்பிடுவார். ஆனால் நசிகேதனில் இருவித ஆசைகளும் காட்டப்படுவதை கவனிக்கலாம்.

  • மூன்று நாட்கள் மரணத்தினோடு: பின்னாளில் ஏசுவின் மரிப்பு மற்றும் உயிர்த்தெழுதல் எனும் கிறிஸ்தவ புராண சித்திகரிப்பில் இதே மூன்று நாட்கள் எதிரொலிப்பதைக் காணலாம். பின்னர் மரணம்-உயிர்த்தெழுதல் குறித்த புராணங்களை தனித்தனியாக காண்கையில் இதனை விளக்கமாக காணலாம்.


அடுத்து நாம் காண இருக்கும் புராண வீர-வீராங்கனைகள் ஞானத்தை தேடி மரணத்தை சந்திப்பவர்கள் இல்லை. மாறாக மரணத்தினை இவ்வுலக வாழ்விலேயே வெல்லத் துணிந்து மரணத்தை சந்தித்தவர்கள்.நன்றி: கட உபநிடதம்:மரணத்திற்கு பின்னால் (விளக்கியவர் சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர்)

மரணத்தை சந்தித்தல் - புராணப் படிமங்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


மானுட பிரக்ஞை இயற்கையின் ஆதார இயக்கங்களை மிகவும் நேரடியாக மிகவும் ஆற்றலுடன் உள்வாங்குகையில் தன்னுள் ஏற்படும் பிம்பங்களைக் கொண்டு எழுவதே புராணப்பார்வை எனலாம். எனவேதான் மரண உலகத்தை நோக்கிய பயணம் - மாண்ட துணையின் உயிரினை மீட்டுவரும் முயற்சி ஆகிய புராணப் படிமங்கள் உலகெங்கும் காணக்கிடைக்கின்றன. மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையிலான முயற்சி மானுடத்திற்கு மட்டுமல்ல மானுடத்தின் மனப்பிரபஞ்சத்தில் எழுந்த அதிமானுட சக்திகளுக்கும் உரியது. பாரத புராணங்களில் சத்தியவான்-சாவித்திரி அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதிகம் தெரியாத ஒரு மரணம் வென்ற காதல் கதை ருரு-ப்ரியம்வதா கதை. ருரு-ப்ரியம்வதா, சத்தியவான்-சாவித்திரி ஆகிய இரண்டுமே மகாபாரதத்தில் உள்ளவை. இவை இரண்டுக்கும் ஒரு வளர்ச்சி தொடர்பும் உள்ளது.


மத்திய ஆசிய மத பிரக்ஞையின் தொல் ஊற்றுக்கண்ணான பாபிலோனிய புராணங்களில் (அவற்றிலிருந்து மீட்டுருவாக்கம் பெற்று விவிலயத்திலிருந்து) மேற்குக்கு பரவிய சரித்திர முலாம் பூசப்பட்ட புராணக்கதையாடல்களில் மற்றும் கிரேக்க-ரோமானிய புராணங்களில் இந்த படிமம் உள்ளது.


இவற்றினை சிறிது விரிவாக பார்க்கலாம்.


ஆஸ்திரேலிய பூர்வீகக்குடிகளின் ஆன்மிகமும் புராணமும்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


"ஆஸ்திரேலிய பழங்குடிகள் இருவித காலங்களின் இருப்பினை நம்புகின்றனர். இரு இணையாக ஓடும் இயக்கம். ஒன்று நீங்களும் நானும் பங்கு கொள்ளும் புறவய அறிதலுக்கு இணங்கும் ஒரு கால ஓட்டம். மற்றதோ கனவுக்காலம். முடிவற்ற ஆன்ம சுழற்சியான இக்காலம் நனவுலக காலத்தினைக் காட்டிலும் உண்மை செறிந்தது. இக்கனவுகாலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளே ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித குறியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கை நடைமுறை விதிகள் ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. அதீத ஆன்மிக ஆற்றல் வாய்ந்த பழங்குடி (பூசாரிகள்) இப்புனித கனவுக்காலத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்."மேற்காணப்படும் மேற்கோள் இயற்பியலாளர் ப்ரெட் ஆலன் வூல்ப்பின் 'The Dreaming Universe' எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் ஆன்மிக வெளிப்பாடுகள் செழுமையும் ஆழமும் கொண்டதோர் ஆன்மிக மரபினைக் காட்டுகின்றன.

கனவுகாலம் என்பது கூட வெள்ளையரின் பதம் தானாம், வூல்ப் கூறுகிறார். ஆதிவாசிகளை பொறுத்தவரையில் கனவு என்பது நனவுலகுடன் இணைந்தியங்கும் ஒரு இருப்பு என்கிறார். (அருந்தா அல்லது அரண்தா எனும் ஆதிவாசி இனத்தாரின் 'அல்கெரிங்கா' எனும் பதத்தை ஸ்டானர் என்பவர் கனவுகாலம் என மொழிபெயர்த்தார்.)


ஆதிவாசிகளின் புராண நாயகர்கள் வீர புருஷர்கள் தம் சாகஸங்களை இந்த அல்கெரிங்காவிலேதான் செய்கின்றனர். ஆதிவாசி புராணங்களை ஆய்வு செய்த காரெட் பர்டெனின் வார்த்தைகளில் 'அனைத்து புராணங்களும் உண்மையானவை ஏனெனில் அவை புனிதமானவை'. ஆனால், வூல்ப் வினவுகிறார்,

"எந்த அளவுக்கு கனவுகாலம் என்பது போன்ற ஒரு புராண ரீதியிலான கற்பனை உண்மையாக இருக்க முடியும்? இது நுட்பமான விதத்தில் அணுகப்பட வேண்டிய பிரச்சனை. புராண சம்பவங்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ நாம் அணுகுகையில் அவைகளில் காணப்படும் காலமானது நாம் நேர்கோட்டில் அறியும் காலமல்ல. சூரியனை பூமி சுற்றிவருவதாலோ அல்லது பாரிஸில் ஒரு பரிசோதனை சாலையிலுள்ள ஒரு சீசியம் அணு ஒளிச்சிதைவடைவதையோ அடிப்படையாக கொண்டு நாம் அனுபவிக்கும் காலமல்ல புராணம் நிகழும் காலத்தின் இயற்கை"(பக் 149).

வரலாற்றின் கால ஓட்டத்தையும் புராணத்தின் கால ஓட்டத்தையும் (கனவுகாலம்) வூல்ப் இங்கு வேறுபடுத்துகிறார். ஆனால் நெடுநீள வரலாற்றுக் கால ஓட்டத்துடன் புராண கால ஓட்டமும் இணைந்து ஒருவித இழையோட்டமாக விளங்குவதே மானுட சமுதாயங்களின் வரலாற்றில் நாம் காண்பது. ஆதிவாசியை பொறுத்தவரையில் புராணங்கள் நிகழும் கனவுக்காலம் மீண்டும் மீண்டும் நிகழும் தன்மையுடன் என்றென்றும் புதிப்பிக்கப்பட்டவாறே உள்ளது.
புராணம் என்பது பாரத மரபின் பதம். அதிசயிக்கத்தக்க வகையில் இப்பதத்திற்கு கொடுக்கப்படும் வியாக்கியானம் மேற்கண்ட ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் ஆன்மிக தரிசனத்திற்கு இணைத்தன்மை கொண்டுள்ளது.

புராணம் = புராதனமானது கூடவே நவமானது எனும் பொருள் படும் பதச் சேர்க்கையே (புராண்+அபி+நவம்).

புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கடவுள் ஏன் மனிதனை படைத்தார் என்றால் அவருக்கு கதை கேட்க ரொம்பவும் ஆசை அதனால்தான் என்று ஒரு யூத வழக்கு உண்டு.
மனித இனம் பரிணமித்தது முதல் அதன் ஒரு முக்கிய செயல்பாடாக கதைகள் திகழ்கின்றன. அக்கதைகளில் மிகவும் ஜீவனுடன் காலங்கள் கடந்து வாழ்ந்து நிற்பவை புராணங்கள். ஆஸ்திரேலிய பூர்விகக் குடிகள் ஆகட்டும், நவஜோ அமெரிக்க பூர்விகக் குடிகள் ஆகட்டும், பாரதம் ஆகட்டும் பண்டைய மெசபடோ மியா ஆகட்டும் அல்லது ஏக இறை கோட்பாட்டினை வலியுறுத்துவதாக கூறும் ஆபிரகாமிய மதங்கள் ஆகட்டும் புராணக் கதைகள் அவை அனைத்திலும் இருக்கின்றன.
புராணங்கள் வெறும் கற்பனையா? வரலாற்று நிகழ்ச்சிகளின் அதீத கற்பனையின் விளைவா? அல்லது இரவு வானிலும் சுற்றி நிற்கும் இயற்கையிலும் நிகழும் நிகழ்ச்சிகள் மனித மனதில் ஏற்படுத்திய பிம்பங்களா? ஆழ்மன வெளிப்பாடுகளா? சமூக பொருளாதார காரணிகளால் மாற்றங்களால் ஏற்பட்டவையா? இவை அனைத்துமேவா? இன்றைக்கும் இப்புராண கதைகள் வாழ்வதற்கு ஏதேனும் நியாயம் இருக்கிறதா?
இவை அனைத்தையும் ஆராயப்போகும் பதிவு இது.வாருங்கள் படியுங்கள் உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.